தோண்டிய குழிகளால் தொல்லை பரிதவிப்பில் பழநி 7 வது வார்டு மக்கள்
பழநி: ஆரம்ப சுகாதார நிலையம் பணிகள் நடைபெறாமல் உள்ளதால்   இதற்காக தோண்டப்பட்ட குழிகளால்  பழநி நகராட்சி 7 வது வார்டு  மக்கள் பரிதவிக்கின்றனர்.வடக்கு ரதவீதி, கீழ்வடம்போக்கி தெரு,மாசிமலை சந்து,திருநீலகண்டன் சந்து, மாடவீதி, கருப்புசுவாமி  சந்து, குமரவேல் சந்து,தேவேந்திரன் சந்து,ரங்காச்சாரி சந்து,சேஷன் சந்து, வேணுகோபால சந்து,அஞ்சுகத்தம்மாள் சந்து ,ரங்கன் சந்து, உடுமலை ரோடு,தேரடி, பெரியநாயகி அம்மன் கோயில்  பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டு   குறுகிய சந்து, சாலைகளுடன் உள்ளது. இப்பகுதியில் நாயகி அம்மன் கோயில் உள்ளதால் விழாக்காலங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.அப்போது பக்தர்கள் ரோடு வசதியின்றி பரிதவிக்கின்றனர். இப்பகுதியில்  நாய் தொல்லை மிக அதிகம் உள்ளதால் மக்கள் ஒரு வித  அச்சத்துடன் வெளியில் நடமாடுகின்றனர்.  கோவை ரோட்டில் சாக்கடையை சீர் செய்ய வேண்டும். கோயிலுக்கு சொந்தமான வெள்ளி ரதம் நிற்கும் மாடவீதி சந்துப் பகுதியில் சாக்கடை சேதமடைந்துள்ளது. பணிகளால் இடையூறு
உதயபாரதி, விவசாயம், குமரவேல் சந்து : இப்பகுதியில்  உள்ள தெரு நாய்கள் குழந்தைகள், முதியவர்களை விரட்டுவதால்   நடமாட இயலாமல் சிரமம் அடைகின்றனர். டூவீலரில் செல்லும் நபர்களையும்  துரத்துவதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. தேரடி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட குழிகள்  தோண்டப்பட்டு பணிகள் நடைபெறாமல் அப்படியே உள்ளன. இதனாலும் இடையூறு ஏற்படுகிறது. சாக்கடைகள் சேதம்
சிவபெருமாள், ஆட்டோ டிரைவர், அஞ்சகத்தம்மாள் சந்து : பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். இப்பகுதியில்  ஆரம்ப சுகாதார நிலையத்தை  நிரந்தரமாக அமைக்க வேண்டும்.   பழைய தாராபுரம் ரோடு, கோவை ரோடு  இணைப்பு பகுதியில் சாக்கடைகள் சேதமடைந்துள்ளன.  இவற்றை சரி செய்ய நகராட்சி  நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் பணிகள் துவங்கும்
சுரேஷ், கவுன்சிலர் (தி.மு.க.,) : நகராட்சி எல்லை பகுதிகளில் அலங்கார வளைவு அமைத்து வையாபுரி குளக்கரைகள் மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக நகராட்சியில் தெரிவித்துள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சில இடையூறுகள் ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்து விரைவில் ஆரம்ப சுகாதார நிலையம் பணிகள் துவங்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படும் போது பொது மக்களுக்கு பயனுள்ள மருத்துவமனையாக செயல்படும். சேதமடைந்துள்ள சாக்கடைகள் விரைவில் சரி செய்யப்படும் என்றார்.