உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வீட்டுக்குள் வரும் சாக்கடை நீர் பழநி 17வது வார்டு மக்கள் அவதி

வீட்டுக்குள் வரும் சாக்கடை நீர் பழநி 17வது வார்டு மக்கள் அவதி

பழநி:சிறிதளவு மழை பெய்தாலும் சாக்கடை நீர் வீட்டிற்குள் வருவதால் பழநி நகராட்சி 17வது வார்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.அண்ணா நகர், திருவள்ளுவர் சாலை, ஆர்.ஏப்.ரோடு இடையே அமையப்பெற்றுள்ள இந்த வார்டில் மாவட்ட கல்வி அலுவலகங்கள், மருத்துவமனைகள் எம்.எல்.ஏ., அலுவலகம், கல்யாண மண்டபம் வணிக வளாகங்கள், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர், சுற்று கிராம மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பகுதியாக உள்ளது. இந்த வார்டை இணைக்கும் முக்கிய வழி பாதையான கல்லறைத் தோட்டம் அருகில் உள்ள சந்து, பி.பி.என். வணிக வளாகம் அருகில் உள்ள சந்துகளில் தெரு நாய் தொல்லை மிக அதிகமாக உள்ளது .இதனால் மக்கள் இப்பகுதியில் நடமாட அச்சப்படுகின்றனர்.

வடிகாலை சரி செய்யுங்க

வேலுச்சாமி, பஸ் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர், சண்முகபுரம் : சாக்கடை சேதமடைந்துள்ளது. சிறிதளவு மழை பெய்தாலும் சாலையில் கழிவு நீருடன் தண்ணீர் செல்கிறது. இதனால் நோய் தொற்று அபாயம் ஏற்படுகிறது. சாலையில் நிறுத்தி வைத்துள்ள வாகனங்கள் சேதமடைகின்றன. வீட்டிற்குள் கழிவு நீருடன் தண்ணீர் வருகிறது. மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும். தண்ணீர் செல்லாமல் அடைபட்டுள்ள வடிகாலை சரி செய்ய வேண்டும்.

தடுமாறும் முதியவர்கள்

ரமாபிரியா, குடும்பத் தலைவி, அண்ணா நகர் : பாதாள சாக்கடை பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. பணிகளின் போது குடிநீர் துண்டிக்கப்படுகிறது. இதனை உடனே சரி செய்து தர வேண்டும். சாலையும் சேதம் அடைகிறது. முதியவர்கள் நடந்து செல்லவும், டூவீலர்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி விழும் சூழலும் ஏற்படுகிறது. இதை கருதி உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளி நபர்கள் நடமாட்டம்

அரவிந்த், தனியார் ஊழியர், அண்ணா நகர்: தெரு நாய் தொல்லை அதிகம் உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி நோய் தொற்று ஏற்படாமல் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க நகராட்சி நிர்வாகம் துரிதமாக செயல்பட வேண்டும். வெளி நபர்கள் நடமாட்டம் இருப்பதால் போலீசார் கண்காணிப்பில் கொண்டு வர வேண்டும்.

விரைவில் நடவடிக்கை

செபாஸ்டின், கவுன்சிலர் (தி.மு.க.,) : மக்கள் குறைகள் அனைத்தும் உடனடியாக சரி செய்யப்படுகிறது. பாதாள சாக்கடை திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருவதால் சிறு இடையூறுகள் ஏற்படுகின்றன. அவை உடனடியாக சரி செய்யப்படுகின்றன. குடிநீர் குழாய்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தெரு விளக்குகள் சரி செய்யப்பட்டுள்ளன. குப்பை முறையாக அகற்றப்படுகிறது. சாக்கடை பிரச்சனையை கூட்டத்தில் எடுத்துக்கூறி சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தெரு நாய்கள் தொல்லை குறித்து எடுத்துரைத்துள்ளேன். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ