கருணை காட்டுங்க: கிராமங்களுக்கு இல்லை போதிய பஸ் வசதி: மாணவர்கள், வேலைக்கு செல்வோர் தவிப்பு
மாவட்டத்தில் 350க்கு மேற்பட்ட கிராமப்பகுதிகள் உள்ளன. நகர் பகுதிகள் விரல் விட்டும் எண்ணும் அளவிற்கே உள்ளன. நகர் பகுதிகளுக்கும், முக்கியமான இணைப்பு பகுதிகளுக்கும் பஸ் போக்குவரத்து இருக்கிறது. ஆனால் கடைகோடி கிராமங்களின் அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இல்லை என்ற புகார்கள் தொடர்கின்றன. எங்கள் பகுதிகளுக்கு பஸ்கள் இல்லை, பள்ளி மாணவர்கள் அவதி என கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் தொடர்ந்து பொதுமக்கள் புகார்கள் அளித்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக கொரோனா காலத்திற்குப்பின் இது அதிகரித்துள்ளது. போக்குவரத்தில் புதிய நியமனம் இல்லை என்பதுதான் பிரதானமான காரணமாக உள்ளது. கிராமப்பகுதிகளை எவரும் கண்டு கொள்வதில்லை. ேஷர் ஆட்டோ, மினி வேன் போன்ற சரக்கு வாகனங்களில் தான் பெரும்பாலான மக்கள் பஸ் வசதி இருக்கும் இடத்திற்கு வந்து அங்கிருந்து நகர் பகுதிகளுக்கு செல்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் பஸ்களே இல்லை என்பதுதான் நிதர்சமான உண்மை. அரசு சார்பில் மினிபஸ்கள், புதியதாக அரசு பஸ்கள் என இயக்கப்படுவது நடந்தாலும் முழுமையான அனைத்து பகுதிகளுக்கும் சென்று வரும் அளவிற்கு பஸ் வசதிகள் இல்லை. துறைரீதியான முறையான ஆய்வு நடத்தி தேவையான இடங்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.