உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குப்பை கிடங்கால் புகை தொல்லை; 3வது வார்டு மக்கள் அவதி

குப்பை கிடங்கால் புகை தொல்லை; 3வது வார்டு மக்கள் அவதி

பழநி : பழநி நகராட்சி குப்பை கிடங்கில் இருந்து வெளிவரும் புகையால் மூன்றாவது வார்டு பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.சத்யா நகர், தக்காளி மார்க்கெட் குடியிருப்பு பகுதிகளை கொண்ட இந்தவார்டில்அருகிலுள்ள நகராட்சி குப்பை கிடங்கில் எரிக்கப்படும் குப்பை புகை அதிகளவில் வருவதால் புகை மண்டலமாகி சுவாசக் கோளாறு, நோய் தொற்று அபாயம் ஏற்படுகிறது.இதனால் வார்டு மக்கள் பெரும் பாதிப்பினை சந்திக்கின்றனர்.இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்தில் முறையிட்டும் எந்தவித நடவடிக்கை இல்லாமல் புகையும் தொடர்ந்து வெளி வருகிறது.இதன் மீது மாவட்ட நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

ரேஷன் கடை இல்லை

கண்ணன், சாக்கு கடை உரிமையாளர், சத்யா நகர் :எங்கள் பகுதியில் அங்கன்வாடி மையம் இல்லை. அருகே ரேஷன் கடையும் இல்லை. சுகாதார வளாகம் இல்லாமல் பெண்கள் அவதிப்படுகின்றனர். பெரியப்பா நகர் பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் இருந்து புகை வெளி வருவதால் தக்காளி மார்க்கெட் பகுதியில் உள்ள மக்கள் அதிக அளவில் பாதிக்கின்றனர்.

சுகாதாரமாக இல்லை

சிவராமன், தனியார் நிறுவன ஊழியர், சத்யா நகர் : சாக்கடை வசதி சரியாக இல்லை. சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும், தண்ணீரும் சுகாதாரமாக இல்லை. சமூகவிரோதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் ரோந்து பணியையும் தீவிர படுத்த வேண்டும்.

குழந்தைகள் அச்சம்

செந்தில்குமார், டெய்லர், சத்யா நகர்: வார்டு பகுதிகளில் மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது போதை வஸ்துகளை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களால் பெண்கள் பெரியவர்கள் குழந்தைகள் அச்சத்துடன் நடமாடும் சூழல் ஏற்படுகிறது இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எங்கள் பகுதியில் நாய் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது.

நாய்களை கட்டுப்படுத்துங்க

சரவணன், கவுன்சிலர் (தி.மு.க.,):தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்க பேசி வருகிறேன். குப்பை கிடங்கை இடமாற்றி தருவதாக பழநி எம்.எல்.ஏ.,செந்தில்குமார் அறிவித்துள்ளார். ரூ.35 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருகிறது.ரேஷன் கடை கட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. 40 ஆண்டுகளாக குடிநீர் இல்லாத பகுதிகளுக்கு குடிநீர் இணைப்பும். தண்ணீர் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. அடிக்கடி குழாய்கள் உடைவதால் சரி செய்து அவ்வப்போது தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ