தமிழர் நாகரிகம், மொழியின் அடையாளம் திருவள்ளுவர் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் புகழாரம்
சின்னாளபட்டி: ''தமிழர் நாகரிகம், தமிழ் மொழி ஆகியவற்றின் ஒட்டுமொத்த அடையாளம் திருவள்ளுவர்,'' என, திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் பல்கலையில் தமிழ் துறை சார்பில் திருவள்ளுவர் சிலையை திறந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகள் பேசினார்.அவர் பேசியதாவது: திருவள்ளுவர் என்பது தமிழ் பண்பாட்டின் தடம். தமிழர் நாகரிகம், தமிழ் மொழி ஆகியவற்றின் ஒட்டுமொத்த அடையாளம். திருக்குறளை கற்பதற்காகவே தமிழை கற்று கொள்ள விரும்பியவர் மகாத்மாகாந்தியடிகள். கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்பதை தன் வாழ்நாளின் இறுதிவரை தனக்கு பிடித்த குறளாகவும், செயலாகவும் குறிப்பிட்டார். அவரது அகிம்சை உணர்விற்கும், அறப்போராட்டத்திற்கும் துாண்டுகோலாக இருந்தது திருக்குறளும், தமிழர்களுமே என்றால் மிகை இல்லை என்றார்.பல்கலை துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். பதிவாளர் ராதாகிருஷ்ணன், வி.ஜி.சந்தோஷம் முன்னிலை வகித்தனர். தமிழ் துறை தலைவர் ஆனந்தகுமார் வரவேற்றார்.திறனாய்வாளர் முருகேசபாண்டியன், இலங்கை தென்கிழக்கு பல்கலை விரிவுரையாளர் செல்வகுமாரி சிவலிங்கம், பெரியார் பல்கலை பேராசிரியர் மாதையன், தமிழ் ஆய்வு அறிஞர் வேலுச்சாமி, அமெரிக்கன் கல்லுாரி உதவி பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம் பேசினர்.