| ADDED : பிப் 23, 2024 06:00 AM
சின்னாளபட்டி: 'எந்த மொழி பேசுபவர்களையும் தமிழ் தன்வயப்படுத்தும், '' என பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா பேசினார்.காந்திகிராம பல்கலை தமிழ் துறை சார்பில் நடந்த உலகத் தாய்மொழி தின விழாவில் அவர் பேசியதாவது; தாய்மொழியில் கற்பதன் மூலமே அறிவும், சிந்தனையும் பெருகும். எல்லா சமயங்களின் ஞானமும், தமிழில் தான் உள்ளது. எந்த மொழி பேசுபவர்களையும் தன்மையப்படுத்தும் ஆற்றல் தமிழுக்கு உண்டு. ஜி.யு.போப், திருவாசகத்தின் சிறப்புகளை ஆங்கிலேயர்கள் உணர வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். பல வெளிநாட்டினர் தமிழ் மொழியில் ஈடுபாடு கொண்டு தமிழைக் கற்றதுடன் உலகமெல்லாம் பரப்பினர். இந்தியாவை ஒற்றுமைப்படுத்த இந்தியத்தாய் என்ற உணர்வை , முன்னோர் உருவாக்கினர். அதைப்போல் தமிழ் மொழியை ஒன்றுபட்டுக் கற்கவும், காக்கவும், தமிழ் உணர்வை ஏற்படுத்தவும் தாய்மொழி என்ற உணர்வு தோற்றுவிக்கப்பட்டது. தமிழின் அறிவு கருவூலங்களை , இளைய தலைமுறை கற்றுக் கொள்ளவும், பரப்பவும் முன்வர வேண்டும் என்றார்.பல்கலை பதிவாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் முத்தையா வரவேற்றார்.மாணவர் நலத்துறை தலைவர் சீதா லட்சுமி, தமிழ்த்துறை பேராசிரியர் ஆனந்தகுமார் பேசினர். உதவி பேராசிரியர் சிதம்பரம் நன்றி கூறினார்.