உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தற்காலிக கடைகளால் நெரிசலுக்கு வாய்ப்பு

தற்காலிக கடைகளால் நெரிசலுக்கு வாய்ப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் அமைக்கப்படும் தற்காலிக கடைகளால் நெரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. கொடைக்கானல் நகராட்சியில் போக்குவரத்து நெரிசல், வாகனங்கள் பார்க்கிங் வசதியில்லாத நிலை தொடர்கிறது. இதனை கருத்தில் கொண்டு கலையரங்கத்தில் ரூ.34 கோடியில் மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்ட நகராட்சி திட்டமிட்டு பணிகள் துவங்க உள்ளன. இங்கு 120க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுகின்றன. கட்டுமான பணியின் போது தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் ரோட்டோரம் காலியிடத்தில் 100க்கும் மேற்பட்ட கடைகளை தற்காலிகமாக அமைக்க நகராட்சி அனுமதியளித்து அதற்கான பணிகள் நடக்கின்றன. கடைகள் அமையும் இடம் ரோட்டிற்கு அருகிலும், போக்குவரத்து இடையூறு உள்ள இடமாகவும் உள்ளது. பயணிகள், பொதுமக்கள் கூடும் தருணத்தில் இப்பகுதியில் மேலும் நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கட்டுமான பணிகள் முடிவுற சில ஆண்டுகள் ஆகலாம் என்ற நிலையில் அங்கு நெரிசல் ஏற்படாதிருக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கிருந்த அம்மா உணவகம், பஸ் ஸ்டாப் அகற்றப்பட்டதால் அரசு நிதியும் வீணடிக்கப்பட்டுள்ளது. நகராட்சி தலைவர் செல்லத்துரை கூறுகையில், ‘கலையரங்கத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டுமான பணி முடியும் வரை தற்காலிகமாக வியாபாரிகள் கடை அமைக்க அனுமதியளித்துள்ளோம். பணி முடிந்தவுடன் கடைகள் முறைப்படுத்தப்படும்’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !