ஆபர் விலையில் ஜவுளி, ஆன்லைன் வெடி விற்பனை; சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
திண்டுக்கல்; தீபாவளி பண்டிகையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் ஆன்லைன் வெடி விற்பனை, விழாக்கால சலுகைகள், கல்வி உதவித்தொகை பெயரில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ளது. திண் டுக் கல் மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 20க்கு மேற்பட்டோர் புகார் கொடுத்துள்ள நிலையில் மோசடிகளில் இருந்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். தீபாவளி, பொங்கல், ஆடி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் புத்தாடைகள் வாங்குவதற்காக பஜாரில் ஜவுளி கடைகள், வணிக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.இந்நிலையில் வாடிக்கையாளர்கள், நுகர்வோர்களின் சவுகரியத்துக்கும், இருந்த இடத்தில் இருந்தே பொருட்களை ஆர்டர் செய்து வீட்டுக்கே டோர் டெலிவரி செய்யும் வசதிக்கும் ஆன்லைன் வர்த்தக முறையை உலகளாவிய ஆன்லைன் வியாபார பெரு நிறுவனங்கள், கார்பரேட் நிறுவனங்கள் அறிமுகப் படுத்தின. இதன் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் வர்த்தகத்தில் பொருட்களுக்கு விலை குறைவு, காம்போ ஆபர்கள் என அள்ளி வழங்கும் சலுகைகளுக்காக மக்களும் ஆன்லைன் வர்த்தகத்தையே பெரிதும் விரும்புகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் விழா சலுகைகள், கல்வி உதவித்தொகை, ஆன்லைன் வெடி விற்பனை பெயரில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ளன. ஒரு வாரத்தில் மட்டும் 20க்கு மேற்பட்ட சைபர் மோசடி புகார்கள் பதிவாகி உள்ளன. ரூ.10 லட்சத்திற்கு மேல் மோசடி நடந்துள்ளது. சைபர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: கல்வி உதவித்தொகை பெயரில் சைபர் மோசடி தற்போது அதிகரித்துள்ளது. தீபாவளி ஆபர் ஜவுளி விற்பனை, ஆன்லைன் வெடி விற்பனை என ஆபர் விலையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பகுதிகளில் பிரபல ஆன்லைன் பெருவர்த்தக நிறுவனங்களின் பெயரில் விளம்பரம் செய்கின்றனர். இதைப்பார்க்கும் சாமானியர்கள் ஆர்வமிகுதியில் அந்த லிங்க்கை கிளிக் செய்தவதன் மூலம் மோசடி நபர்களால் உருவாக்கப்பட்ட போலியான வர்த்தக வலைத்தள பக்கங்களுக்கு செல்கிறது. அங்கு குறுகிய நேரத்திற்குள் புக் செய்தால் மட்டுமே பொருள் கிடைக்கும் என மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியும் 'கேஷ் ஆன் டெலிவரியை' தேர்ந்தெடுக்க முடியாதபடி லாக் செய்தும் வாடிக்கையாளர்களிடம் பணம் மோசடி செய்கின்றனர். பொதுமக்கள் ஆன்லைன் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வோடு இருப்பது அவசியம் என்றனர்.