உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குடகனாற்றின் குறுக்கே பாலம் ஓகே... தடுப்புச்சுவர் இல்லையே

குடகனாற்றின் குறுக்கே பாலம் ஓகே... தடுப்புச்சுவர் இல்லையே

வேடசந்துார் : கூத்தாங்கல்பட்டி மெயின் ரோட்டில் குடகனாற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்ட நிலையில் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்காததால் தண்ணீர் தேங்கி போக்குவரத்து சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் குமுறுகின்றனர்.தாடிக்கொம்பு, வேடசந்துார் வழியாக செல்லும் குடகனாற்றின் குறுக்கே அழகாபுரியில் குடகனாறு அணை கட்டப்பட்டுள்ளது. அணை கட்டிய பிறகு 27 அடிக்கு தண்ணீர் தேக்குவதால், கூத்தங்கல்பட்டிக்கு செல்லும் மெயின் ரோட்டில் குடகனாறு ஆறு குறுக்கிடும் நிலையில் தண்ணீர் அங்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் இப்பகுதி மக்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாமல் 50 ஆண்டுகளாக குடகனாறு ஆற்றின் குறுக்கே பாலம் வசதி கேட்டு போராடி வந்தனர்.அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட இந்த பாலம் பணி தற்போதைய தி.மு.க., ஆட்சி காலத்தில் முடிவு பெற்றது. புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் மகிழ்ச்சிகரமாக பயணத்தை துவக்கினார். ஆனால் தற்போதைய மழை காலத்தில் அணையில் 24 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் பாலத்தின் நான்கு புறமும் தண்ணீர் சுற்றி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதே போல் பள்ளி குழந்தைகள் செல்ல முடியவில்லை. இப்பகுதி மக்களின் நலன் கருதி புதிய பாலத்தின் இருபுறமும்200 மீட்டர் துாரத்திற்கு தடுப்பு சுவர் அமைத்து , தார் ரோடு அமைக்க வேண்டும் .அப்போதுதான் பாலம் கட்டிய பயன் மக்களை சென்றடையும்.

கடந்து செல்லமுடியாது அவதி

எஸ்.ராஜேஸ்வரி, குடும்பத் தலைவி, கூத்தாங்கல்பட்டி: பாலம் கட்டவே இவ்வளவு காலம் ஆகிவிட்டது. தடுப்பு சுவரையும் சேர்த்து கட்டியிருந்தால் இவ்வளவு பாதிப்பு இருக்காது . தடுப்பு சுவர் இல்லாததால் தான் இடுப்பு அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதை கடந்து செல்ல பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இந்த வழியாக நுாற்பாலைக்கு செல்லும் வாகனங்கள் கூட வருவதில்லை. பள்ளி வாகனங்களும் வர முடியவில்லை. இந்தபகுதி மக்களுக்கான ரேஷன் கடை கூவக்காபட்டியில் உள்ளது. அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கி வருவதிலும், தண்ணீரைக் கடந்து வருவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. கூத்தாங்கல்பட்டி பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை இல்லை.

புதுப்பிக்க வேண்டும்

ஏ.சதீஷ்குமார், வார்டு உறுப்பினர், ராமாநாயக்கனுார்: குடகனாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்ட நிலையில் தடுப்பு சுவரையும் 200 மீட்டர் துாரத்திற்கு இருபுறமும் கட்டி தார் ரோடு அமைக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும். இது குறித்து ஊராட்சி , ஒன்றிய நிர்வாகத்திடமும் கோரிக்கை வைத்துள்ளேன். மழை காலங்களில் குறிப்பாக அணையில் தண்ணீர் தேங்கிய காலகட்டங்களில் இந்தப் பகுதியில் நீர் எதிர்த்து நிற்கிறது. வறட்சி காலத்தில் பாலம் கட்டி முடித்ததால் இதன் பாதிப்பு அப்போது தெரியவில்லை. தற்போது அணைக்கட்டில் தண்ணீர் தேங்கிய நிலையில் தான் அதன் பாதிப்பு மக்களுக்கு தெரிய வருகிறது. மக்களின் நலன் கருதி தடுப்பு சுவர் அமைத்து ரோட்டை மெயின் ரோட்டில் உள்ள பஸ் ஸ்டாப் வரை புதுப்பிக்க வேண்டும் என்றார்.

பாலத்தை சுற்றி நிற்கும் தண்ணீர்

டி.செல்வநாராயணன், முன்னாள் வார்டு உறுப்பினர், கூத்தாங்கல்பட்டி: மேம்பாலம் கட்ட கோரி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தோம். தற்போது பாலம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இரண்டு புறமும் தடுப்பு சுவர் அமைக்காமல் விட்டுவிட்டனர். இதனால் அணைப்பகுதியில் தேங்கிய தண்ணீர் பாலத்தை சுற்றி நிற்கிறது. இதனால் மீண்டும் பழைய காலத்திற்கு சென்றதைப் போல் உணர்கிறோம். இந்த புதிய பாலத்தின் இருபுறமும், 200 மீட்டர் துாரத்திற்கு பாலம் உயரத்திற்கு சமமாக தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும். தற்போது தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மக்கள் வெரியம்பட்டி வழியாக சுற்றி செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை