உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாவட்டம் தோறும் தணிக்கை பிரிவு தலைமை ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்

மாவட்டம் தோறும் தணிக்கை பிரிவு தலைமை ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்

திண்டுக்கல், : 'தணிக்கை பணி நிலுவையால் ஓய்வு பெறும் தலைமையாசிரியர்கள் ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களை உரிய நேரத்தில் பெற முடியாத நிலை ஏற்படுவதால் மாவட்டம் தோறும் முதன்மை கல்வி அலுவலகங்களில் தணிக்கை பிரிவை ஏற்படுத்த வேண்டும்,' என, தலைமையாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.பள்ளிகளில் ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு அவர்களின் பணிக்காலங்களில் கையாண்ட வரவு -செலவு கணக்குகள் தணிக்கை முடிக்கப்பட்டு தடையின்மை சான்று வழங்கப்பட்ட பின்னரே ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த தணிக்கை பணியானது சென்னை பள்ளிக்கல்வி இயக்ககத்தில் உள்ள நிதி ஆலோசகர், முதன்மை கணக்கு அலுவலர்கள் தலைமையில் மேற்கொள்ளப்படுகிறது. ஒரே இடத்தில் தணிக்கை மேற்கொள்வதால் காலதாமதம் ஏற்படுவதாகவும், அதை தவிர்க்க மாவட்டம்தோறும் முதன்மை கல்வி அலுவலகங்களில் தணிக்கை பிரிவை ஏற்படுத்த வேண்டும் எனவும் தலைமையாசிரியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.திண்டுக்கல்லில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநில தலைவர் அன்பரசன் கூறியதாவது:மதுரை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் பள்ளிக்கல்வித்துறையின் தணிக்கை அலுவலகங்கள் செயல்பட்டன. தற்போது இவைகள் கலைக்கப்பட்டு ஒரே இடத்தில் தணிக்கை மேற்கொள்ளும் வகையில் சென்னை பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிதி ஆலோசகர், முதன்மை கணக்கு அலுவலர் பணியிடங்கள் காலி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் தணிக்கையில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் ஓய்வு பெறும் தலைமையாசிரியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதை தவிர்க்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் தணிக்கை பிரிவு ஏற்படுத்த வேண்டும். தணிக்கை ஆட்சேபனைகள் உள்ள ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு எளிதில் தீர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை