கொடைக்கானலில் பூத்து குலுங்குகின்றன குறிஞ்சி மலர்கள்
கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் சிறு குறிஞ்சி பூக்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிக்கின்றனர்.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீலக்குறிஞ்சி மலர்கள் பூக்கும். குறிஞ்சி மலர்களில் 200க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இந்நிலையில் குறிஞ்சி பூ வகையை சேர்ந்த சிறு நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் பரவலாக வனப்பகுதியில் பூத்துள்ளன.இவ்வகை மலர்கள் கார்டி போலியா என்ற தாவரவியல் பெயரில் அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் டிச., முதல் பிப்.,வரை மலைப்பகுதியில் பரவலாக பூக்கும். சீதோஷ்ண நிலை மாற்றம் அடைந்தால் இவ்வகை மலர்கள் பூப்பதில் சில ஆண்டுகள் தாமதம் ஏற்படலாம். மற்றபடி இவை குறிஞ்சி மலர்களை சேர்ந்த இனமாக உள்ளது என தாவரவியலாளர்கள் தெரிவித்தனர்.தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் சிறு குறிஞ்சி மலர்கள் நீலம், வெள்ளை நிறங்களில் பூத்துக் குலுங்கின்றன. சுற்றுலாப் பயணிகள் இவற்றை கண்டு ரசிக்கின்றனர்.