உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறுமலை வாழையோடு மலைக்காய்கள் கலப்படம்: மகத்துவம் தெரியாமல் மங்கும் அபாயம்

சிறுமலை வாழையோடு மலைக்காய்கள் கலப்படம்: மகத்துவம் தெரியாமல் மங்கும் அபாயம்

திண்டுக்கல்: மருத்துவ குணம் கொண்ட சிறுமலை வாழைப்பழத்தை தரம் பிரிக்காமல் இதர மலைக்காய்களோடு சேர்த்து விற்பனை செய்வதால் சிறுமலை வாழையின் மகத்துவம் மங்குவதோடு பொதுமக்கள் ஏமாற்றம் அடைகின்றனர். இதற்கு தனி குறியீடு வழங்கி சிறுமலை வாழையை மீட்டெடுக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திண்டுக்கல்லில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் 1600 அடி உயரத்தில் 18 கொண்டை ஊசி வளைவுடன் அண்ணா நகர், பழையூர், புதுார், அகஸ்தியர்புரம், தாளக்கடை, வேளாண்பண்ணை, பொன்னுருக்கி, கருப்பு கோயில் என 15 உள்கிராமங்களை கொண்டு 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மலை கிராம மக்கள் வாழும் இடமாக உள்ளது சிறுமலை. சிறுமலையில் மக்களின் பிரதான தொழில் விவசாயம். வாழை, பலா, எலுமிச்சை, காப்பி, மிளகு, சவ் சவ், அவரை உள்ளிட்டவைகளை விவசாயம் செய்து வருகின்றனர். 90 சதவீதம் விவசாயிகள் பூச்சி மருந்துகளையோ, உரங்களையோ பயன்படுத்துவதில்லை .சிறுமலை வாழை பழம் 15 தினங்கள் வரை கெட்டுப் போகாமல் தோல் கருத்து காணப்பட்டாலும் சுவை மிகுந்து அழுகாமல் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி வாங்கி உண்பர்.இவ்வளவு மகத்துவத்தை கொண்ட இந்த வாழைக்கு மத்திய, மாநில அரசுகளால் புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாழைகள் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள சிறுமலை பழ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு வியாபாரிகள் மத்தியில் ஏலம் விடப்படுகிறது. வெளியூர் வியாபாரிகளுக்கு சிறுமலை பழமார்கெட் வந்து ஏலம் எடுத்துச் செல்வர். இந்நிலையில் சிறுமழை வாழைப்பழங்களோடு மேற்குத் தொடர்ச்சி மேல் மலைகளான ஆடலுார், தாண்டிக்குடி, பன்றிமலை, கொடைக்கானல் மலை பகுதிகளின் விளையும் வாழைப்பழங்களும், கர்நாடக மாநிலம் குடகு கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சிறுமலை சந்தைக்கு மலை வாழைக்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.இங்கு வரக்கூடிய மலைவாழைகளை தரம் பிரித்து விற்பனை செய்யாமல் குவியியல் குவியலாக வைத்து கமிஷன் கடைக்காரர்கள் ஏலம் விடுகின்றனர். ஏலம் விடும் மலை காய்களை வியாபாரிகளும் ஏலத்தில் எடுத்துச் சென்று பொதுமக்களுக்கு சிறுமலை வாழையுடன் கலந்து விற்பனை செய்வதாக சிறுமலை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.சிறுமலை விவசாயி தியாகராஜன் கூறியதாவது: 3 முதல் 5 நாட்களிலே அழுகக்கூடிய தன்மை கொண்ட மற்ற மலை காய்களுடன் சிறு மலை வாழை காய்கள் சேர்த்து விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்களிடையே சிறுமலை வாழையின் மகத்துவம் குறைந்துவிடுகிறது. மருத்துவ குணம் கொண்டது என்பதால் சிறுமலை வாழைக்கு தனி மவுசு உண்டு. பொதுமக்களும் விரும்பி கேட்டு வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால் மேல்மலை, வெளி மாநில காய்களான படத்திகாய், பேங்காய் போன்ற ரக காய்களை சிறுமலை காய்களுடன் சேர்த்து சிறுமலை வாழைக்காயின் விலைக்கு நிகராக விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைகின்றனர். விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. சிறுமலை வாழையின் மகத்துவம் குறையாமல் இருக்கவும் மருத்துவ குணம் கொண்ட வாழை, பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைய சிறுமலை வாழைக்கு என தனி குறியீடுகள் வழங்கிட வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை