கொடை யில் காட்டுப்பன்றி தாக்கி மூவர் படுகாயம் மக்கள் ரோடு மறியலால் தவித்த பயணிகள்
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்னவனுாரில் காட்டுப்பன்றி தாக்கி மூவர் படுகாயமடைந்த நிலையில் பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.மன்னவனுார் ஜெயராஜ் 65. இவரது மனைவி சுசிலா 60. சிவபாண்டி 8. இவர்கள் நேற்று கும்பூர் அருகே உள்ள மூக்கம்புரை விவசாய நிலத்தில் பூண்டு நடவு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பதுங்கி இருந்த காட்டுப்பன்றி சிவபாண்டியை தாக்கியது. காப்பாற்ற சென்ற சுசிலா, ஜெயராஜையும் தாக்கியது.இதில் மூவரும் படுகாயம் அடைந்தனர். மன்னவனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு டாக்டர் இல்லை. பின்னர் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுசிலா, சிவபாண்டியன் மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மறியல்
கொடைக்கானல் மலைப்பகுதியில் மனித- வனவிலங்கு மோதல்களால் சில மாதங்களில் 6 பேர் பாதிக்கப்பட்டதில் இருவர் பலியாகினர். இந்நிலையில் மூவர் காட்டுப்பன்றி தாக்கி காயமடைந்தனர். விவசாய பயிர்கள் வனவிலங்குகளால் பாதிக்கப்படுவதும், வன விலங்குகள் தாக்கப்படுவதால் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கொடைக்கானல் மன்னவனுார் ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர். மதியம் 12:00 மணிக்கு துவங்கிய மறியல் மாலை 6:00 மணி வரை நீடித்தது. அதன்பின்னரும் வனத்துறையினர் வராததால் விரக்தி அடைந்தனர். வனத்துறை உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படும் வரை மறியல் தொடரும். காட்டுப்பன்றிகளை சுட்டுத் தள்ள அரசு உத்தரவிட்ட நிலையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தற்காலிகமாக திறக்கப்பட்ட பேரிஜம் ரோடு
மறியலால் 6 மணிநேரம் மேல் போக்குவரத்து பாதித்த நிலையில் சூழல் சுற்றுலா மையம்,மத்திய அரசு செம்மறி ஆடு ஆராய்ச்சி நிலையத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் தவித்தனர். இதை தவிர்க்க வனத்துறையினர் பேரிஜம் ரோட்டை தற்காலிகமாக திறந்து சுற்றுலா வாகனங்களை மட்டும் அனுமதித்தனர். பஸ்கள் அனுமதிக்கப்படாத நிலையில் மன்னவனுார் பகுதியிலே நின்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.