பழநியில் போக்குவரத்து மாற்றம் தொடரும்; கனரக வாகனங்கள் செல்ல நேரம் நிர்ணயம்
பழநி: பழநியில் நேற்று சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட ஒரு வழிப்பாதை பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து இதையே கடைபிடிக்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர். மேலும் காந்தி மார்க்கெட் ரோடு பகுதிகளில் கனரக வாகனங்களை இயக்க நேரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பழநி நகரில்போக்குவரத்து நெரிசலை குறைக்க நேற்று சோதனை அடிப்படையில் ரெணகாளியம்மன் கோயில் சந்திப்பு பாதை,ராஜேந்திரரோடு பகுதி ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறைந்து பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து போலீஸ் நிர்வாகம் இதையே தொடர்ந்து கடைப்பிடிக்க அறிவுறுத்தி உள்ளனர். மேலும் பழநி, காந்தி மார்க்கெட், ராஜாஜி ரோடு, மூலக்கடை பகுதிகளில் வணிக நிறுவனங்கள் கடைகள் அதிகம் உள்ளதால் போக்குவரத்து நெரிசலை குறைக்க காந்தி மார்க்கெட், மூலக்கடை, ராஜாஜி சாலை, சாமி தியேட்டர் ஆகிய மூன்று இடங்களில் கனகர வாகனங்கள் செல்லும் தடுப்புகள் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இனிவரும் காலங்களில் காலை 11:00 மணி முதல் மதியம் 3:00மணி,இரவு 9:00 மணி முதல் மறுநாள் காலை 7:00 மணி வரை சரக்கு வாகனங்கள் இப்பாதையில் பொருட்களை ஏற்றி இறக்கி கொள்ள வேண்டும். மற்ற நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு வணிக நிறுவனங்கள், வணிகர் சங்கங்கள் லாரி உரிமையாளர் சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென போலீசா ர் கேட்டுள்ளனர்.