உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / துாய்மை காவலர்களுக்கு தினமும் இரண்டு வேளை பழச்சாறு

துாய்மை காவலர்களுக்கு தினமும் இரண்டு வேளை பழச்சாறு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் கிராமப்புறங்களில் பணிபுரியும் துாய்மை காவலர்கள், பணியாளர்கள் கோடை வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க தினமும் இரண்டு வேளை பழச்சாறு வழங்கப்படுகிறது.இம்மாவட்டத்தில் துாய்மை பாரத இயக்க திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் வாயிலாக கிராம ஊராட்சிகளில் 3800 துாய்மை காவலர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் வீடுவீடாக சென்று குப்பையை சேகரித்து மக்கும் குப்பையை உரமாக்குதல், மறுசுழற்சி செய்ய தக்கதாக உள்ள மக்காத குப்பையை விற்பனை செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் ஹீட் ஸ்ட்ரோக் போன்றவற்றிலிருந்து தப்பிக்க அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. மதியம் 12:00 முதல் 3:00மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் துாய்மை காவலர்களின் பணி காலை 8:00 மணிக்கு தொடங்கி மாலை 4:00 மணிக்கு முடிகிறது. பெரும்பாலன நேரம் வெயிலில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது.வெயிலின் தாக்கத்திலிருந்து இவர்களை காக்க திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தினமும் இரு வேளை பழச்சாறு வழங்கப்படுகிறது. எலுமிச்சை, தர்பூசணி தொடங்கி அந்தந்த பகுதிகளில் எந்த பழங்கள் அதிகம் கிடைக்குமோ அதை கொண்டு ஜூஸ் தயாரித்து வழங்கப்படுகிறது.

பொது நிதியிலிருந்து செ லவிடப்படுகிறது

கலெக்டர் சரவணன்: துாய்மை காவலர்களின் பணி பெரும்பாலும் வெயில் நேரங்களில் உள்ளது. இதனால் தினமும் இரு வேளை பழச்சாறு வழங்க அறிவுறுத்தியுள்ளோம். அந்தந்த ஊராட்சி அலுவலகம் வாயிலாக இந்த சேவை வழங்கப்படுகிறது. இதற்கான தொகை மாவட்ட நிர்வாகத்தின் பொது நிதியிலிருந்து செலவிடப்படுகிறது. வெயில் தாக்கம் குறையும் வரை இந்த சேவை இருக்கும். மதியம் 12:00 முதல் மதியம் 3:00 மணி வரை வெளியே செல்லாமல் குப்பையை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபடவும் பணியாளர்களை அறிவுறுத்தியுள்ளோம்.

புத்துணர்வாக உள்ளது

மீனா, துாய்மை காவலர், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி: வெயில் காரணமாக காலை, மாலையும் கிராம ஊராட்சி சார்பில் பழச்சாறு வழங்கப்படுகிறது. எலுமிச்சை, மாதுளை, ஆரஞ்ச், இளநீர்,மோர் என ஏதேனும் ஒன்று வழங்கப்படுகிறது. வெயிலில் அலைந்து வரும் எங்களுக்கு இந்த பழச்சாறு குளிர்ச்சியளக்கிறது. உடலுக்கு புத்துணர்வாக உள்ளது. வெயில் காலம் முடியும் வரை தருவதாக தெரிவித்துள்ளனர்.

களைப்பு தெரியவில்லை

மாரியம்மாள், கோம்பைபட்டி ஊராட்சி, சாணார்பட்டி: எங்கள் ஊராட்சியில் காலை 11:00 மணி, மதியம் 2:00 மணி என இரண்டு முறை பழச்சாறு வழங்கப்படுகிறது. வெயில் அதிகம் இருந்தால் வெளியில் செல்லாமல் குப்பையை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தியுள்ளனர். வெயில் நேரங்களில் இதுபோல் பழச்சாறு வழங்குவது உடல் சூட்டை தணிப்பதோடு பணியில் களைப்பும் தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை