சுகாதார நிலையம் மாறியதால் தவிப்பில் இரு கிராம மக்கள்
வடமதுரை : காணப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துடன் புதிதாக இணைக்கப்பட்ட சில கிராம மக்கள் நலத்திட்ட உதவிகள் பெற நீண்ட துாரம் பயணிக்கும் நிைல உள்ளது.காணப்பாடியில் புதிதாக உருவான அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துடன் புத்துார், மோர்பட்டி துணை சுகாதார நிலைய பகுதி கிராமங்கள் இணைக்கப்பட்டன. புத்துாரை பொறுத்தமட்டில் அய்யலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும், மோர்பட்டிக்கு பிலாத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் சுலபமாக சென்று திரும்ப வசதியான அருகிலுள்ள இடங்களாகும். இவ்விரு பகுதிகளையும் காணப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைத்ததால் இப்பகுதியினர் 2 பஸ்கள் மாறியே காணப்பாடி சென்று அங்கிருந்து 750 மீட்டர் நடக்க வேண்டியுள்ளது. சிகிச்சைக்கு மக்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றாலும், கர்ப்பிணிகள் நல உதவிகள் உள்ளிட்ட அரசு திட்ட சலுகைகள் பெற அந்தந்த பகுதி சுகாதார நிலையத்திற்கே சென்றாக வேண்டும். இதனால் மோர்பட்டி, புத்துார் பகுதி மக்கள் நீண்ட துார செல்ல வேண்டியிருப்பதால் சிரமப்படுகின்றனர்.