அயலக தமிழ் இளைஞர்கள் வருகை
திண்டுக்கல் : தமிழக மரபியல், பண்பாடு, கலாசாரம் பற்றி அறிய 14 நாடுகளை சேர்ந்த புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் வேர்களைதேடி திட்டத்தின் கீழ் குழுவாக திண்டுக்கல் வந்தனர். புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களை தாய்த்தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கவும், தமிழ் கலை, பண்பாடு, கலாசாரத்தினை அயலகத் தமிழர்களிடையே பரிமாற்றம் செய்யும் வகையிலும், ஆண்டுதோறும் 200 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து தமிழகத்துக்கு வரவழைக்கும் வேர்களைத் தேடி எனும் அயலக தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். அதன்படி இந்தாண்டு மலேசியா, இலங்கை, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த 98 அயலகத் தமிழ் இளைஞர்கள் ஆக. 1 முதல் ஆக. 15 வரை தமிழகத்தில் பண்பாட்டுப் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த குழுவினர் நேற்று திண்டுக்கல் வந்தனர். அவர்களை கலெக்டர் சரவணன் வரவேற்று கலந் துரையாடினார்.