உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வீடுகளுக்குள் தண்ணீர்... ஆக்கிரமிப்பில் ரோடுகள்... கொந்தளிக்கும் திண்டுக்கல் 11வது வார்டு மக்கள்

வீடுகளுக்குள் தண்ணீர்... ஆக்கிரமிப்பில் ரோடுகள்... கொந்தளிக்கும் திண்டுக்கல் 11வது வார்டு மக்கள்

திண்டுக்கல் : மழைநீர் தேக்கம், கொசுத்தொல்லை, ஆக்கிரமிப்பு, கழிப்பறை , சாலை வசதி இல்லாதது என திண்டுக்கல் மாநகராட்சி 11வது வார்டில் குறைகள் பட்டியல் சொல்ல முடியாத அளவுக்கு நீண்டுள்ளது. கச்சேரி தெரு, மவுன்ஸ்புரம், காந்தி மார்க்கெட், லைன் தெரு, தாலுகா ஆபிஸ்ரோடு, காமராஜர்புரம் பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் அபிராமி அம்மன் கோவில் தெரு, காந்தி மார்கெட், முக்கிய பஜார் பகுதிகள் வருவதால் தினசரி வணிகத்திற்காகவும், தேவைக்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த வார்டில் ரோடுகள் ஆக்கிரமிப்பால் மக்கள் தினமும் அல்லாட வேண்டிய நிலை உள்ளது. தேவையான இடங்களில் பொதுக்கழிப்பறை இல்லை. மழைக்காலத்தில் ரோடுகளில் பெருக்கெடுக்கும் மழைநீர் கடை , வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. பல இடங்களிலும் ரோடு வசதி முறையாக இல்லை என்கின்றனர் வார்டு மக்கள். போக்குவரத்துக்கு இடையூறு சுந்தரி, கச்சேரி தெரு, திண்டுக்கல்: கூலித்தொழிலாளர்கள், சிறு வியாபாரிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் இப்பகுதியில் நடக்கும் வணிகத்தை சார்ந்தே உள்ளது. ஆனால் அவர்களுக்கான எந்த அடிப்படையும் வசதியும் இங்கு இல்லை. அதிக வாகன நெரிசல் ஏற்படும் இடங்களில் இந்த வார்டும் உண்டு. சாலை ஆக்கிரமிப்பு செய்து குறுக்கும் நெடுக்குமாக டூவீலர்கள், வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் விபத்து அபாயத்தையும் உருவாக்குகிறது. தெருக்களில் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் நீடிக்கும் இருளை மது அருந்துபவர்களும், கஞ்சா போதை ஆசாமிகளும் சாதகமாக பயன்படுத்துகின்றனர். இரவு நேரங்களில் அவ்விடங்களை கடப்பதற்கு பெண்கள் அச்சம் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. பெண்கள் பள்ளி அருகே சாக்கடையில் மண் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைநீர் கடைகளுக்குள் புகுந்துவிடுகிறது. நடவடிக்கை இல்லை முத்துக்குமார், கிழக்கு பா.ஜ.,மாவட்ட பொதுச்செயலாளர், திண்டுக்கல்: வார்டில் பெரும்பாலான இடங்களில் குடியிருப்புகள், வணிகக்கடைகள் சாலை மட்டத்தில் இருந்து தாழ்வாகவே உள்ளது. இதனால் மழைக்காலத்தில் ரோட்டில் பெருக்கெடுக்கும் மழைநீர் வீடு , கடைகளுக்குள் புகுந்து மக்கள் இயல்பு வாழ்க்கையை பாதிக்கிறது. கனமழைக்கு பின்னும் வடிகால் வசதியின்றி தேங்கி நிற்கும் தண்ணீரால் அவ்விடமே சேறும், சகதியுமாய் மாறுவதுடன் கொசு உற்பத்திக்கும், சுகாதார கேடுக்கும் வழிவகுக்கிறது. தொந்தியா பிள்ளை சந்து பகுதியில் பேவர் பிளாக் சாலை வசதி இல்லை. பல இடங்களில் பேவர் பிளாக் கற்கள் பெயர்ந்து சீரமைப்பு பணிகள் செய்யாமல் கிடக்கிறது. சாய்ந்த நிலையிலான மின்கம்பங்களை மாற்ற பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. வார்டு மக்கள் பயன்பாட்டுக்கென தேவையான இடங்களில் பொதுக்கழிப்பிடம் இல்லை. புதிய அங்கன் வாடி அமைப்பு மாரியம்மாள், கவுன்சிலர் (மார்க்சிஸ்ட்): 'வார்டில் சாலை சீரமைப்பு செய்யவேண்டிய இடங்களில் பணிகள் துவங்கி நடந்துவருகிறது. மழைக்காலம் என்பதால் வாறுகால்களில் மண் அள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காமராஜர்புரம், லைன் தெரு இரு இடங்களிலும் பொதுக்கழிப்பறை பயன்பாட்டில் உள்ளது. மின் விளக்கு, பேவர் பிளாக் சாலை அமைப்பது, பாதாள சாக்கடை பணிகள் குறித்து தொடர்ந்து மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தி வரு கிறேன். பழைய பாதாள சாக்கடைத்திட்ட பணிகளுக்கு பின்பே புதிய திட்டத்தின் கீழ் பணிகள் துவங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் நலனுக்காக லாரிப்பேட்டையில் ரூ.17 லட்சத்தில் எம்.பி., நிதியில் புதிய அங்கன்வாடி கட்டும் பணி நடந்து வருகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ