ஏன் இந்த பாகுபாடு: விரிவாக்க பகுதியில் இல்லை வசதிகள்: நித்தம் பரிதவிப்பில் குடியிருப்பு வாசிகள்
மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, மூன்று நகராட்சிகள், 23 பேரூராட்சிகள், 306 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் உள்ள பல விளைநிலங்கள் விலை நிலங்களாக மாறி குடியிருப்பு பகுதிகளாக மாற்றமடைந்து வருகிறது. இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் என்பதே பல ஆண்டுகளாக எட்டாக்கனியாக இருந்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளிடம் முறையாக அனுமதி வாங்கி வீடுகளை கட்டினாலும், ரோடுகள், சாக்கடைகள், குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அறவே இல்லை. இன்னும் பல இடங்களில் ஆண்டுக் கணக்கில் அடிப்படை வசதிகள் கிடைக்கப்பெறாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.மழை காலங்களில் மழைநீர் வெளியேற வழி இல்லாமல் தெருக்களிலே தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல சாக்கடை இன்றி அருகிலேயே தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. போதுமான தெரு விளக்குகள் இல்லாததால் இரவு நேர இருளை பயன்படுத்தி திருட்டுச் சம்பவங்களும் நடந்து வருகிறது. விரிவாக்க பகுதிகள் சிலவற்றில் ஆள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் பகலிலே திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இப்பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர உள்ளாட்சி அமைப்புகள் முனைப்பு காட்ட வேண்டும்.கண்ணன்