தாண்டிக்குடியில் காட்டுயானை ; பயிர்கள் சேதம்
தாண்டிக்குடி : தாண்டிக்குடி , கொடலங்காட்டில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் விவசாயப் பயிர்களை சேதப்படுத்தின. இம்மலைப்பகுதியில் சில ஆண்டுகளாக முகாமிட்டுள்ள யானைகளால் மலை வாழை விவசாயம் அழிவின் விளிம்பிற்கு சென்றுவிட்டது. பெயரளவிற்கு வனத்துறையினர் யானைகளை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டும் அவை போக்குகாட்டுகின்றன. பயிர் சேதத்திற்கும் உரிய இழப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் செய்வதறியாவது தவிக்கின்றனர். சில தினங்களாக கொடலங்காடு, தாண்டிக்குடி பெருங்கானல், கானல் அடி பகுதியில் முகாமிட்டுள்ள 3 யானைகள் காபி, வாழை, ஏலக்காய், சவ்சவ் பந்தல் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தின. வத்தலக்குண்டு ரேஞ்சர் காசிலிங்கம் கூறுகையில் ,''விவசாய தோட்டப் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை வனப்பகுதியில் விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். யானை நடமாட்டத்தை கண்காணித்து தரைப் பகுதிக்கு இடம் பெயர செய்யும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்'' என்றார்