காற்றில் சாய்ந்த பேரிகாடுகள் அறுந்த கேபிள் ஒயர்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்று மாலை வீசிய பலத்தக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாலை தடுப்புகள் சாய்ந்தன. கேபிள் ஒயர்கள் அறுந்து விழுந்தன. திண்டுக்கல்லில் பகலில் வெயில் வாட்டி வதைக்கிறது. மதியத்திற்கு பின்பு, வெயில் மறைந்து மழைக்கு அச்சாரமிடும் சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் மழைக்கு அச்சாரமிட்டபடி வானில் கருமேகக்கூட்டங்கள திரண்டிருந்தன. மழை வரும் எதிர்பார்த்திருந்த போது பலத்தக்காற்று வீசியது. நகர் பகுதிகளில் பல இடங்களில் சுழல்காற்று வீசியதில் காற்றின் திசைவேகத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஜி.டி.என்.,சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகாடுகள் ரோட்டில் சாய்ந்தன. கேபிள் ஒயர்கள் அறுந்து விழுந்தன. அக்கம்பக்கத்தினர் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவாறு அவற்றை அப்புறப்படுத்தினர். வடமதுரை : வடமதுரை சுற்றுப்பகுதியில் நேற்று மதியம் சூறைக்காற்று வீசியதில் தென்னம்பட்டி ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலை குறுக்கே பனை மரம் விழுந்தது. இதனால் இரு மின்கம்பங்களுடன் மின் ஒயர்களும் ரோட்டில் விழுந்தன. எஸ்.ஐ., பாண்டியன் தலைமையிலான வடமதுரை போலீசார் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர்.