குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண் திருநங்கை என்பதால் நிராகரிக்கப்பட்ட பணி
திண்டுக்கல்: திருநங்கை என்பதால் அங்கன்வாடி பணி நிராகரிப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மக்கள் குறைதீர் கூட்டத்தில் பலரும் முறையிட்டனர்.இதனிடையே குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயன்ற நிலையில் அதை போலீசார் தடுத்து நிறுத்தனர். கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 150 க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.ரெட்டியார்சத்திரம் முத்தனம்பட்டி புதுார் பகுதியை சேர்ந்த திருநங்கை டட்லிகா முத்தீஸ்வரன் அளித்த மனுவில்,இளங்கலை இலக்கியம், பி.எட், படித்துள்ளேன். ஏப்ரலில் அங்கன்வாடி பணியாளர் காலி இடத்திற்கு விண்ணப்பம் செய்தேன். ஆனால் திருநங்கை என்பதால் நிராகரிக்கப்பட்டுள்ளேன். தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள இதுபோன்ற பணி காலியிடங்களில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் . தனது மனுவை கருணையுடன் கலெக்டர் பரிசீலனை செய்து அந்த அங்கன்வாடி வேலை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தார்.திண்டுக்கல் மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்க மாவட்ட செயலர் சாமுவேல் அளித்த மனுவில்,அரசாணை 187 ஐ ரத்து செய்திடவும் வரும் காலங்களில் தட்டச்சு மிஷின்கள் கொண்ட பயிலகங்கள் மூலமாகவே தேர்வுகள் நடத்தடவும் தமிழக முதல்வருக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்க வேண்டும். இந்த கோரிக்கையினை ஏற்று தமிழகம் முழுவதும் உள்ள 5 ஆயிரம் அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிலக உரிமையாளர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தார்.அரசு நிலம் ஆக்கிரமிப்பு ஆத்துார், பெருமாள்கோவில்பட்டி ஊர்நாட்டமை சவரிமுத்து , கிறிஸ்துவ வன்னிய பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் ஊரில் உள்ள அரசு நிலம் பயன்படுத்துவது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதற்கு முன்புள்ள மேல்முறையீட்டு வழக்கில் அந்த இடம் ஊர்மக்களுக்கு பொதுவானது எனவும், திருவிழா காலத்தில் ரதத்தை நிறுத்த எந்தவித தடையும் இல்லை என உத்தரவு பெற்றுள்ளோம். அந்த உத்தரவு தற்போது வரை நிலுவையில் உள்ள நிலையில் தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து ஊரில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட காரணமாக உள்ளனர் என தெரிவித்துள்ளனர். நிலக்கோட்டை ,ஜம்புதுரைக்கோட்டை, ஜே.ஊத்துப்பட்டி வடக்கு தெரு மக்கள் அளித்த மனுவில்,எங்கள் பகுதியில் அருந்ததியர் சமுதாயத்திற்கு உட்பட்ட மயானம் உள்ளது. 3 தலைமுறைகளாக பயன்படுத்தி வருகிறோம். மயானத்திற்கு விளைநிலங்கள் வழியாகதான் செல்ல வேண்டும். தற்போது அந்த நிலங்கள் தனி நபருக்கு விற்கப்பட்டதாக கூறி மயானத்திற்கு அவ்வழியை பயன்படுத்தக்கூடாது என்கின்னறர். மயானத்தையும், அதற்கான வழித்தடத்தையும் மீட்டுத்தர வேண்டுமென கேட்டுள்ளனர். குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சிநிலக்கோட்டை கொங்கபட்டியை சேர்ந்த சுஜிதா 25, தனது இரண்டு குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி திக்குளிக்க முயன்றார். இதை பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் மீட்டனர் . சுஜிதா கூறியதாவது : இரண்டு குழந்தைகள் உள்ளது. கணவர் செல்லமுத்து சென்னை காய்கறி சந்தையில் பூ வியாபாரம் செய்கிறார். ஒரு வருடமாக வேறு ஒரு பெண்ணை சேர்த்து வைத்து கொண்டு நிலக்கோட்டைக்கு வருதில்லை. எனது நகைகள் அனைத்தையும் பிடுங்கிவிட்டார். கணவருடன் சேர்த்து வைக்க கோரி நிலக்கோட்டை போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இதனால் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள வந்தேன் என்றார்.
மாற்றுத்திறனாளிகள் அவதி
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பாதை , சாக்கர நாற்காலிகள் உள்ளன. ஆனால் சக்கர நாற்காலியில் வைத்து கூட்டிச் செல்ல அலுவலர்கள் எவரும் இருப்பதில்லை. குறைதீர் கூட்ட நாளில் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள துறை அலுவலர்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டும் ஆட்கள் இல்லை. பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் கருணை அடிப்படையில் அழைத்து செல்கின்றனர். இதனால் ஒவ்வொரு முறையும் மாற்றுத்திறனாளிகள் எவரையாவது எதிர்பார்த்து அவதிப்படுகின்றனர்.