உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் விளைச்சல் பாதிப்பு விலை உயர்ந்த பிளம்ஸ்

கொடையில் விளைச்சல் பாதிப்பு விலை உயர்ந்த பிளம்ஸ்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் ஏராளமான ஏக்கரில் பிளம்ஸ் சாகுபடி செய்யப்படுகிறது. சில ஆண்டுகளாக சீதோஷ்ண நிலை மாற்றம், நோய் தாக்குதலால் பிளம்ஸ் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளது.இம்மலைப்பகுதியில் 5 வகையான பிளம்ஸ் சாகுபடியாகும் நிலையில் மே மாதம் சீசன் துவங்கி ஆகஸ்ட் வரை நீடிக்கும். பிளம்ஸ் பூ பூக்கும் தருணத்தில் டிசம்பரில் பெய்த கன மழையால் பூக்கள் உதிர்ந்து காய்ப்பு தன்மையை இழந்தது. வழக்கத்திற்கு மாறான வெயிலின் தாக்கம், கூடுதல் மழைப்பொழிவு என பிளம்ஸ் சாகுபடிக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை நீடிக்காததால் விளைச்சல் 80 சதவீதம் சரிவடைந்துள்ளது. 2024 ல் கிலோ ரூ. 60க்கு விற்ற நிலை மாறி தற்போது கிலோ ரூ.200 க்கு விற்கப்படுகிறது. பழங்கள் வழக்கமான சுவை தன்மையையும் இழந்துள்ளது.பிளம்ஸ் வியாபாரி பேரின்பம் கூறியதாவது: ஆண்டுதோறும் மே மாதத்தில் நாள் ஒன்றுக்கு 10 டன் பிளம்ஸ் பழங்கள் கொடைக்கானலில் இருந்து விற்பனைக்கு கேரளா உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அனுப்புவது வாடிக்கையாகும். தற்போது நாளொன்றுக்கு 200 கிலோ மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது. ஒட்டுமொத்தத்தில் பிளம்ஸ் விளைச்சல் பாதிப்பால் விவசாயிகளும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளோம். ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் பிளம்ஸ் பழ சாகுபடியில் ஏற்பட்டுள்ள சீதோஷ்ண நிலை மாற்றமே இதற்கு காரணம். தோட்டக்கலைத்துறையினர் அழிவின் விளிம்பிற்கு சென்றுள்ள பிளம்ஸ் சாகுபடியை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ