பொறுப்புகளை சரியாக பயன்படுத்த வேண்டும் பண்ணை வீடு திரும்பிய எம்.எல்.ஏ., பளிச்
பொறுப்புகளை சரியாக பயன்படுத்த வேண்டும்பண்ணை வீடு திரும்பிய எம்.எல்.ஏ., 'பளிச்'கோபி:அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்காக, கோவை மாவட்டம் அன்னுாரில், அ.தி.மு.க., பொது செயலாளர் இ.பி.எஸ்.,சுக்கு நடந்த பாராட்டு விழாவில், முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.,வுமான செங்கோட்டையன் பங்கேற்காதது, கட்சியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினரும் மாறி, மாறி பதில் அளித்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் நடந்த, 'திஷா' மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கூட்டத்தில், பங்கேற்றார். இந்நிலையில் சென்னையில் இருந்து, விமானத்தில் நேற்று கோவை வந்தார். அங்கிருந்து காரில் கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு காலை, 11:00 மணிக்கு வந்தார். அப்போது அவர் கூறியதாவது: முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில், தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தினேன். இதற்கு முன் நடந்த 'திஷா' கூட்டத்திலும் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது. அதற்கான தொகை வழங்குவதாக தெரிவித்துள்ளனர். கோபியில் புறவழிச்சாலை அமைப்பது குறித்தும், பன்றிகள் நடமாட்டத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும், பசுமை வீடுகள் குறித்தும் வலியுறுத்தினேன். 'திஷா' கமிட்டி கூட்டத்தில் நான் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன். அந்த கூட்டத்தை எப்போதும் 'மிஸ்' பண்ணியதில்லை. நமக்கு போட்ட பொறுப்புகளை, மக்களுக்காக சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். அதனால் கூட்டத்தில் பங்கேற்றேன். இவ்வாறு அவர் கூறினார்.