தற்கொலை செய்து கொண்ட தம்பதி மகளும், மகனும் இறந்ததால் சோகம்
கோபி,:கோபி அருகே மீன்கிணறு பகுதியை சேர்ந்தவர் தனசேகர், 35, கார்மென்ட்ஸ் கம்பெனி டெய்லர்; இவரின் மனைவி பாலாமணி, 29; இவரும் கார்மென்ட்ஸ் கம்பெனி டெய்லர். தம்பதியின் குழந்தைகள் மகள் வந்தனா, 10, மகன் மோனீஷ், 7; இருவரும் முறையே ஐந்தாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படித்தனர். தனசேகரின் தாயாரும் பாட்டியுமான பெரியகண்ணாளுக்கு, வந்தனா நேற்று முன்தினம் காலை போன் செய்தார். 'தந்தை, அம்மா விஷமருந்தி விட்டனர். தனக்கும், தம்பிக்கும், கூல்டிரிங்ஸில் செல்பாஸ் மருந்தை கலந்து கொடுத்து விட்டனர். நால்வரும் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.பெரியகண்ணாள் அதிர்ச்சியுடன் மருத்துவமனைக்கு சென்றபோது, மகனும், மருமகளும் இறந்தது தெரியவந்தது. அவசர சிகிச்சை பிரிவில் வந்தனா, மோனீஷ் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் அவர்களும் நேற்று இறந்தனர்.பெரியகண்ணாள் புகாரின்படி, சிறுவலுார் போலீசார் விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், 'தனசேகர் சரியாக வேலைக்கு செல்லாததால் தம்பதி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது' தெரிய வந்துள்ளது. குடும்ப பிரச்னைதான் நால்வர் இறப்புக்கான காரணமா அல்லது வேறு காரணம் உள்ளதா? என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.