உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வராண்டாவுக்கு வந்த நகராட்சித் தலைவர் :ஈரோட்டை சுழன்றடிக்கும் ஜெ., ஃபோட்டோ

வராண்டாவுக்கு வந்த நகராட்சித் தலைவர் :ஈரோட்டை சுழன்றடிக்கும் ஜெ., ஃபோட்டோ

ஈரோடு: பெரியசேமூர் நகராட்சி அலுவலகத்தில் தனது அறையிலிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஃபோட்டோவை அ.தி.மு.க.,வினர் அகற்றியதை கண்டித்து, வராண்டாவில் உட்கார்ந்து நகராட்சித் தலைவர் பணிகளை கவனித்தார். பெரியசேமூர் நகராட்சித் தலைவராக இருப்பவர் தி.மு.க.,வைச் சேர்ந்த சுப்பிரமணியன். ஆட்சி மாற்றத்துக்கு பிறகும், நகராட்சி அலுவலகத்தில் உள்ள தனது அறையில் முதல்வர் ஜெயலலிதா ஃபோட்டோவை மாட்டாமல், முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின் ஃபோட்டோவையே வைத்திருந்தார். இதையறிந்த, அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்டச் செயலாளர் பழனிசாமி தலைமையில், நகர செயலாளர் சக்தி, மாவட்ட மகளிரணி செயலாளர் மல்லிகா மற்றும் அ.தி.மு.க.,வினர் நேற்றுமுன்தினம் காலை பெரியசேமூர் நகராட்சி அலுவலகத்தில் திரண்டனர். நகராட்சித் தலைவர் அறையில் இருந்த கருணாநிதி, ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ராஜா ஃபோட்டோக்களை அகற்றினர்; முதல்வர் ஜெயலலிதா ஃபோட்டோவை மாட்டினர். இதையறிந்த நகராட்சி தலைவர் சுப்பிரமணியன், கவுன்சிலர் பொன் பூபதி, தி.மு.க., நகரத் துணைச் செயலாளர் ரவி உள்ளிட்ட தி.மு.க.,வினர், நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது, தி.மு.க., - அ.தி.மு.க.,வினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் இருதரப்பினரையும் கலைய வைத்தனர். நேற்று காலை 10 மணியளவில் நகராட்சி அலுவலகத்துக்கு வந்த தலைவர் சுப்பிரமணியன், அங்கு தனது அறைக்கு செல்லவில்லை. அறையிலிருந்த டேபிள், நாற்காலி ஆகியவற்றை அலுவலக வராண்டாவுக்கு எடுத்து வந்து, அமர்ந்தார். அங்குள்ள சுவற்றில் கருணாநிதி, ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் பெரியசாமி, ராஜா ஆகியோரது ஃபோட்டோக்களை மாட்டிக் கொண்டார். பணிகளை கவனிப்பது போல, பத்திரிகைகளுக்கு 'போஸ்' கொடுத்தார். மதியம் வெளியே சென்றார். மாலை வரை தலைவரது நாற்காலி, மேஜை ஆகியவை வராண்டாவிலேயே இருந்தன. இதுபோன்ற காட்சிகள், ஈரோடு மாநகராட்சி, சத்திரம் நகராட்சி, பெரியசேமூர் நகராட்சி... என, நாள்தோறும் அரங்கேறுகிறது. அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் நடத்தும் ஃபோட்டோ அரசியல் எப்போது தான் முடிவுக்கு வருமோ? என, நகராட்சி அலுவலர்கள் புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்