மக்களோடு தேர்தலை சந்திக்கிறோம்: சீமான்
மக்களோடு தேர்தலை சந்திக்கிறோம்: சீமான் ஈரோடு:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமியை ஆதரித்து ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடந்த பொது கூட்டத்தில் சீமான் பேசியதாவது:இது மாற்றத்துக்கான தேர்தல். சொந்த நிலத்தில் அடிமைகளாக இருக்கும் இழி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆறு மாதங்களில் கிழியும் சேலையை துணிகடைக்கு சென்று, 100, 200 சேலைகளை பார்த்து வாங்கிறோம். ஐந்து ஆண்டு நாட்டை ஆளும் தலைவரை தேர்வு செய்ய நம்மிடம் தேடுதல் இல்லை. தேர்தல் வந்து விட்டால் ஒரே சின்னம், ஒரே தலைவன் என்று பழகி விட்டோம். இது சமூக நோய். பிற மாநிலத்தவர் எனில் நான் என்றோ முதல்வராக ஆகி இருப்பேன். இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற பொதுமக்களின் நினைப்பால் தோற்கிறோம். தமிழகத்தின் கனிம வளங்களை கொள்ளையடித்தது தி.மு.க. நான் மக்களை நம்புகிறேன். நேசிக்கிறேன். மக்களோடு தேர்தலை சந்திக்கிறோம். எட்டு வழி சாலை, பரந்துார் விமான நிலையம், பேனா சிலையை அமைக்க விடமாட்டோம். இன மக்களை இழிவுபடுத்தியவர் ஈ.வெ.ரா., ஆனால் காமராஜர் அணைகளை கட்டியவர். லஞ்சம் வாங்குவது என்ன தப்பு என்று கேட்டவர் ஈ.வெ.ரா. இலங்கையில் ஏ.கே. 74 ரக துப்பாக்கியால் சுடுவதை பிரபாகரன் எனக்கு கற்றுகொடுத்தார். அந்த துப்பாக்கி ரஷ்யாவிலும், விடுதலை புலிகளிடம் மட்டும் தான் உள்ளது என்று பிரபாகரன் கூறினார். இந்தியாவிலேயே நான் ஒருவன் தான் ஏ.கே.74 ரக துப்பாக்கியில் சுட்டவன்.இவ்வாறு அவர் பேசினார்.