குப்பை வரி பாக்கிக்காக குடிநீர்இணைப்பை துண்டிக்க வந்த மாநகராட்சி
குப்பை வரி பாக்கிக்காக குடிநீர்இணைப்பை துண்டிக்க வந்த மாநகராட்சிஈரோடு:குப்பை வரி பாக்கிக்காக, வீட்டு குடிநீர் இணைப்பை துண்டிக்க வந்த மாநகராட்சி அலுவலர்களால், கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். ஈரோடு, கனிராவுத்தர் குளம், நந்தவன தோட்டம் சி.எஸ்.நகர் எதிரே வசிப்பவர் உதயகுமார். முதல் தளத்தில் வீடு கட்டி வசிக்கிறார். தரைத்தளத்தில் இரு கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன் மாநகராட்சி அலுவலர்கள், ஒரு கடைக்கு குப்பை வரி நிலுவையில் இருப்பதாக கூறியுள்ளனர். கடந்த மாதம் வந்தவர்கள், கடைக்கு குப்பை வரியாக, 2017 முதல் தற்போது வரை, 18 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறி சென்றுள்ளனர். நேற்று காலை, 15க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் வந்துள்ளனர். குப்பை வரி செலுத்தாததால் வீட்டு குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணியில், கான்கிரீட் காரையை பெயர்த்துள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த உதயகுமார், அப்பகுதியை சேர்ந்த சிலர், அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து மொபைல்போனில் யாரிடமோ பேசிய அலுவலர்கள், குடிநீர் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையை கைவிட்டு சென்றனர்.