ஓடையில் நச்சுக்கழிவு நீரை கொட்டியநிறுவனத்தின் மின் இணைப்பு கட்
ஓடையில் நச்சுக்கழிவு நீரை கொட்டியநிறுவனத்தின் மின் இணைப்பு 'கட்'சென்னிமலை:பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஆர்.கே.ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் இருந்து, டேங்கர் லாரிகளில் எடுத்து செல்லப்பட்ட அமில கழிவுநீர், நசியனுார் அருகே ஆட்டையம்பாளையம் பகுதியில், கீழ்பவானி கசிவுநீர் ஓடைப்பள்ளத்தில் விடப்பட்டது. இதனால் அப்பகுதி தடுப்பணை, ஓடை, கிணறுகள், போர்வெல்களில் தண்ணீரின் நிறம் மாறியது. மாவட்ட அளவில் இந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிறுவனத்தின் மீது நடவடிக்கை கோரி, பல்வேறு தரப்பில் குரல் எழுந்தது. இந்நிலையில் மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலரின் கணவரின் புகார் அடிப்படையில், சித்தோடு போலீசார் நிறுவனம் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.இந்த விவகாரத்தில் போலீசாரின் விசாரணை அடிப்படையில், ஆர்.கே.ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பை துண்டிக்க, சென்னை மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலகம் உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில் நிறுவனத்துக்கு மின் இணைப்பை மின்வாரிய அதிகாரிகளும், குடிநீர் இணைப்பை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் நேற்று துண்டித்தனர். முன்னதாக ஆலையை அந்த நிறுவனமே நேற்று மூடிவிட்டது. ஆலைக்கு 'சீல்' வைப்பது குறித்து அரசு அறிவிப்பு வெளியான பிறகு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.