கல்லுாரிகளில் ஒழுங்கீன செயல்பாடுகளை கட்டுப்படுத்த குழு; அமைச்சர் கோவிசெழியன்
கல்லுாரிகளில் ஒழுங்கீன செயல்பாடுகளை கட்டுப்படுத்த குழு; அமைச்சர் கோவிசெழியன்ஈரோடு:ஈரோட்டில், சிக்கய்ய நாயக்கர் கல்லுாரியை, சிக்கய்ய நாயக்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியாக பெயர் மாற்றம் செய்து, பெயர் பலகை திறப்பு விழா நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். முதல்வர் திருக்குமரன் வரவேற்றார். விழாவில் பங்கேற்ற, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறுகையில், ''இக்கல்லுாரியை, அரசு கல்லுாரியாக மாற்ற மிகுந்த அக்கரையுடன் செய்யப்பட்டுள்ளது. கல்லுாரி வளர்ச்சிக்காக உடனடியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு, திறப்பு விழா நடந்துள்ளது,'' என்றார்.பெயர் பலகையை திறந்து வைத்து, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவிசெழியன், நிருபர்களிடம் கூறியதாவது:சிக்கய்ய நாயக்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் விளையாட்டு அரங்கம், ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம், நுாலகம் ஆகியவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு கல்லுாரி பேராசிரியர்கள் சிலர், பல்கலை கழக உறுப்பு கல்லுாரி பேராசிரியர்கள் சிலருக்கு உள்ள, ஊதிய வேறுபாடுகளை களைய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.பெரியார் பல்கலை கழகத்தின் நிலவரம் அனைவரும் அறிவர். அங்கிருந்த துணைவேந்தர், பேராசிரியர்களுக்குள் ஏற்பட்ட சங்கடமான சூழலால், சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறது. அது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தமிழக அரசால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள் உள்ளடங்கிய, துணைவேந்தர் தேடுதல் குழு இருந்தது. தமிழக அரசின் பிரதிநிதி இருக்கக்கூடாது. யூ.ஜி.சி., பிரதிநிதி, கவர்னர் பிரதிநிதி மட்டும் இருக்க வேண்டும் எனக்கூறி, அரசின் பிரதிநிதித்துவம் இல்லாமல், துணைவேந்தர் நியமன அதிகாரத்தை கொண்டு வந்துள்ளனர். இதை மாநில அரசு எதிர்த்துள்ளது. நாங்கள் ஏற்கனவே தேர்வு செய்து அனுப்பிய தேர்வு குழுவை, கவர்னர் நிறுத்தி, திரும்ப அனுப்புகிறார். சட்ட ரீதியான போராட்டம் நடக்கிறது.கவர்னரின் பணி, செயல் என்ன என்பதை நிர்ணயிக்க கோரி, நீதிமன்றத்தில் அரசு வழக்கு தொடுத்துள்ளது. விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். அனைத்து கல்லுாரிகளிலும் ஒழுங்கீன செயல்பாடுகள், மாணவர்களை ஒழுங்குபடுத்துதலுக்காக அரசு, பொது அமைப்புகள் கொண்ட குழு விரைவில் அமைக்கப்பட்டு, சீர்படுத்தப்படும்.இவ்வாறு கூறினார்.கல்லுாரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, கோவை மண்டல இணை இயக்குனர் கலைசெல்வி, எம்.பி.,க்கள் அந்தியூர் செல்வராஜ், பிரகாஷ், எம்.எல்.ஏ., சந்திரகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.