பவானியில் மக்கள் சாலை மறியல் நகராட்சி தலைவர் சமாதானம்
பவானி:பவானி நகராட்சிக்கு உட்பட்ட, 26 மற்றும் 27வார்டு பகுதிகளான பூக்கடை வீதி, நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் தேர் வீதி பகுதிகளில், சாலையின் இருபுறமும் பூக்கடை மற்றும் டீக்கடை, தள்ளுவண்டி கடைகளால் சாலை ஆக்கிரமிக்கப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்படுவதாக, நெடுஞ்சாலைத்துறையினருக்கு புகார் போனது. இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர். அப்போது தாங்களே ஆக்கிரமிப்பை அகற்றி கொள்வதாக வியாபாரிகள் கூறியதால் திரும்பி சென்றனர்.நேற்று 26வது வார்டு கீரைக்கார வீதி மற்றும் தேர் வீதி பகுதி மக்கள், சாலையோர சாக்கடைகளை அகற்றும்போது நகராட்சி நிர்வாகம் உடனடியாக மாற்று ஏற்பாடுகளை, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கூறி, வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் பவித்ரா தலைமையில், ஈரோடு-மேட்டூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பவானி போலீசார் மற்றும் நகர்மன்ற தலைவர் சிந்துாரி, பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆக்கிரமிப்பு மட்டுமே அகற்றப்படும். சாக்கடை வசதி போன்ற அடிப்படை பிரச்னைகளுக்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என கூறவே, கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.