காய்கறி மார்க்கெட் அமைக்க ஆய்வு நடத்த ரூ.௨௬ லட்சம் ஒதுக்கீடு நிதி பற்றாக்குறையால் தவிக்கும் மாநகராட்சி தாராளம்
ஈரோடு: ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், சோலாரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், 19.69 ஏக்கர் பரப்பளவில், 63.50 கோடி ரூபாய் மதிப்பில், புது பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதோ அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வருகிறது என்ற அறிவிப்பால், வாய்தா பஸ் ஸ்டாண்டாக இது மாறி விட்டது. இந்த லட்சணத்தில் இப்பகுதியில் காய்கறி வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, 20 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் அமைக்கப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.இதன் அடிப்படையில், ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் மற்றும் வணிக வளாகம் அமைக்கும் பணிக்கு, தனியார் ஆலோசகர் மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அளிக்க, அதற்கான செலவினம், 26.16 லட்சம் ரூபாய் வழங்க, கடந்த மாமன்ற கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது. செயல்பாட்டுக்கே வராத பஸ் ஸ்டாண்டில், திட்ட அறிக்கை தயாரித்து அளிக்க, 26.16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இது ஊழலுக்கே வழிவகுக்கும் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி இதுகுறித்து அ.தி.மு.க., கவுன்சிலரும், எதிர்க்கட்சி தலைவருமான தங்கமுத்து கூறியதாவது:காய்கறி மார்க்கெட் மற்றும் வணிக வளாகம் அமைக்கும் பணிக்கு, தனியார் கலந்தாலோசகர் மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, 26.16 லட்சம் நிதி ஒதுக்கீடு என்பது அதிகமானது. இது தேவையற்றது. மாநகராட்சி நிதியை வீணாக்கும் நடவடிக்கை. மாநகராட்சியிலேயே சீனியர் அளவில் நிறைய பொறியாளர்கள் உள்ளனர். அவர்களை புறக்கணித்து விட்டு, தனியார் கலந்தாலோசகர் மூலம் திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. மாநகராட்சி நிர்வாகத்தில் ஆளும்கட்சியின் தலையீடு கொடி கட்டி பறக்கிறது. சில நேர்மையற்ற அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு, திட்ட அறிக்கை தயாரிக்க நிதி ஒதுக்கி, முறைகேடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதோ? என்று சந்தேகம் ஏற்படுகிறது. இந்த தீர்மானத்தை ரத்து செய்து விட்டு, மாநகராட்சி பொறியாளர்களை வைத்து, திட்ட அறிக்கையை தயார் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.