தலைமை தெய்வமாக திகழும் பெரிய மாரியம்மன்
தலைமை தெய்வமாக திகழும் பெரிய மாரியம்மன்கொங்கு மண்டலத்தின் நடுநாயகமாக அமைந்திருப்பது ஈரோடு. ஆயிரமாண்டுகள் பழமையான ஈரோடு பல்வேறு சிறப்புகளை பெற்றது. அத்தகைய ஈரோட்டில் எழுந்தருளி மக்களுக்கு நன்மை அருள் புரியும் தாயாக வீற்றிருப்பவர் பெரிய மாரியம்மன். இந்த கோவிலை, 1,200 ஆண்டுகளுக்கு முன், கொங்கு சோழர்கள் கட்டியதாக வரலாறு கூறுகிறது.ஈரோட்டில் கோட்டை இருந்த காலத்தில், அதற்குள் இருந்து, ௨௪ கொங்கு நாடுகளையும் காக்கும் தெய்வமாக, கோட்டை பெரிய மாரியம்மன் என்று அழைக்கப்பட்டு வருகிறார். ஈரோடு நகரத்திற்குள் கருங்கல்பாளையம் மாரியம்மன், நடு மரியம்மன், நாராயண வலசு மாரியம்மன், குமலன்குட்டை மாரியம்மன், எல்லை மாரியம்மன் உள்ளிட்ட பல மாரியம்மன் கோவில்களும் உள்ளன. ஆனால், அனைத்து மாரியம்மன் கோவில்களுக்கும் தலைமை தெய்வமாக இந்தப் பெரிய மாரியம்மனே வணங்கப்படுகிறார். இரவை பகலாக்கும்மலர் பல்லக்குஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் வரும், 4ல் மலர் பல்லக்கில் அம்மன் வீதி உலா நடக்கிறது. இதையொட்டி 4ம் தேதி இரவு விடிய, விடிய பக்தர்கள் இவ்விரு கோவில்களுக்கும் வந்து அம்மனை தரிசித்து செல்வர். கோவிலுக்கு செல்லும் வழித்தடத்தின் இருபுறங்களிலும் அதாவது பெரியார் வீதி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும். 4ல் பெரிய மாரியம்மன் கோவிலிலும் விடிய, விடிய மக்கள் தரிசனம் செய்யவும், மாவிளக்கு ஏற்றி வழிபடவும் வந்து செல்வர்.மக்கள் தெய்வம்மாரியம்மன்மாரி என்பதற்கு மழை என்பது பொருள். மழை என்பது குளிர்ச்சி பொருந்தியது. மாரியம்மன் குளிர்ச்சியும், தண்மையும் நிறைந்த தெய்வம். வெப்பத்தால் ஏற்படும் அம்மை நோயை தடுக்கின்ற தெய்வம். வெப்பத்தால் நாட்டில் ஏற்படும் வறட்சிக்கு பின்னர் மழையை தந்து மீண்டும் செழிக்க செய்யும் தெய்வம் மாரியம்மன். மாரி என்றால் மழை பெய்யும் என மாரியம்மன் கதை பாடல் கூறுகிறது. மாரியம்மனும் கொடிய அசுரனை கொல்லவே அவதாரம் எடுத்ததாக கூறப்படுகிறது. சாந்த குண தெய்வமான மாரியம்மன், அடியார்களுக்கு வேண்டிய அருள் பாலிப்பதோடு மக்களின் கொடிய நோய் தீர்வதற்கு காரணமாகவும் உள்ளார். எனவேதான் மாரியம்மனை, மக்கள் தெய்வமாக வழிபடுகின்றனர். மாரியம்மன் மகிமையை உணர்ந்த ஆண், பெண்கள் மாரியம்மன் பெயரையும் வைத்து கொள்கின்றனர்.