உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கவுன்சிலரை கண்டித்து கடையடைப்பு

கவுன்சிலரை கண்டித்து கடையடைப்பு

பு.புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி வாரச்சந்தை வளாகத்தில், தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை நடத்தி வருகின்றனர். வாடகை வசூலிக்கும் குத்தகைதாரருக்கும், வியாபாரிகளுக்கும் பிரச்னை இருந்தது. இது தொடர்பாக சில தினங்களுக்கு முன் நகராட்சி கமிஷனர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு காய்கறி மூட்டைகளை மார்க்கெட்டில் இறக்கி வைக்க வியாபாரிகள் வந்தபோது, தி.மு.க., நகர செயலாளரும், நகர்மன்ற துணைத் தலைவருமான சிதம்பரத்தின் மகன் சந்தானபாரதி, 15வது வார்டு தி.மு.க., நகராட்சி கவுன்சிலர் சிவசண்முகம் ஆகியோர், மார்க்கெட்டில் மின் இணைப்பை துண்டித்து, வியாபாரிகளை உள்ளே வைத்து நுழைவு வாயிலை பூட்டியுள்ளனர். இதை கண்டித்தும், இருவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், காய்கறி மார்க்கெட்டில் நேற்று கடைகளை அடைத்து, வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கோபால், சுரேஷ் கூறியதாவது: தி.மு.க., நகர செயலாளர் சிதம்பரத்தின் மகன் சந்தானபாரதி, தி.மு.க., கவுன்சிலர் சிவசண்முகம் ஆகியோர், பெண் வியாபாரிகளை உள்ளே வைத்து, காய்கறி மார்க்கெட் நுழைவு வாயிலை பூட்டி, தரக்குறைவாக பேசி இழிவுபடுத்தினர். இருவரின் மீது நடவடிக்கை கோரி, நகராட்சி கமிஷனர், போலீசில் ஏற்கனவே புகார் அளித்துள்ளோம். இவ்வாறு கூறினர்.எம்.எல்.ஏ., ஆதரவு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பவானிசாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள், நேற்று மதியம் மார்க்கெட்டுக்கு வந்தனர். அப்போது மார்க்கெட் வளாக பகுதி அசுத்தமாக இருப்பதாக கூறி, நகராட்சி அதிகாரிகளை அழைத்து நடவடிக்கை எடுக்க, எம்.எல்.ஏ., பண்ணாரி அறிவுறுத்தினார். நாளை உண்ணாவிரதம்நகராட்சி கவுன்சிலர் சிவசண்முகம் மீது அவதுாறு பரப்பும் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தை கண்டித்து, பஸ் ஸ்டாண்ட் முன் நாளை உண்ணாவிரத போராட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ