குறுமைய விளையாட்டு: 600 மாணவர்கள் பங்கேற்பு
ஈரோடு, பள்ளி கல்வித்துறை சார்பில், ஈரோடு கிழக்கு மண்டலத்தை சேர்ந்த பள்ளிகளுக்கான, குறுமைய விளையாட்டு போட்டி வ.உ.சி மைதானத்தில் நடந்து வருகிறது. மாணவியருக்கான வாலிபால், கபடி, கால்பந்து, கூடைப்பந்து போட்டியில், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நேற்று, மாணவர்களுக்கான வாலிபால், கபடி, கால்பந்து போட்டிகள் நடந்தன. 39 பள்ளிகளை சேர்ந்த, 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் விளையாடினர்.கிழக்கு மண்டலம் போலவே, மற்ற மண்டலங்களிலும் குறுமைய போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. முதல் இரண்டு இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்படும். இதேபோல் மற்றொரு நாளில், ஓட்டப்பந்தய போட்டி நடக்கிறது. இதில் வெற்றி பெறுவோர் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பர். அதில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.