குமுறலால் கிடைத்தது நீதி; வி.ஏ.ஓ.,க்கள் நிம்மதி
கோபி, ஆக. 24-கோபி தாலுகா, புஞ்சை துறையம்பாளையம் பஞ்சாயத்து, டி.என்.,பாளையம் வனச்சாலையில், சட்டவிரோத கல்குவாரியில் நடந்த வெடி விபத்தில், இருவர் பலியாகினர். இது சம்பந்தமாக குவாரி உரிமையாளர் உட்பட மூவரை பங்களாப்புதுார் போலீசார் கைது செய்தனர். புஞ்சைதுறையம்பாளையம் 'அ' கிராம வி.ஏ.ஓ., நடராஜ், துறை ரீதியாக மேற்கொண்ட நடவடிக்கை, அவர் அறிக்கை தாக்கல் செய்த விபரங்களை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்கத்தினர், டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம் நேற்று முன்தினம் மனு கொடுத்தனர். மேலும், வி.ஏ.ஓ., நடராஜ் மீதான நடவடிக்கையை கைவிடக்கோரி, நுாற்றுக்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்கள், கோபி ஆர்.டி.ஓ., ஆபீசில் நேற்று காலை குவிந்தனர். தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் முருகேசன், மாநில துணைத்தலைவர் நல்லாக்கவுண்டன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் உட்பட முக்கிய நிர்வாகிகளுடன், ஆர்.டி.ஓ., கண்ணப்பன் பேச்சுவார்த்தை நடத்தினார். 'வி.ஏ.ஓ., நடராஜ் மீதான தற்காலிக பணி நீக்க நடவடிக்கையை ரத்து செய்து, அதற்கான ஆணையை, ஆர்.டி.ஓ., படித்து காண்பித்தார். இதனால் போராட்டம் ரத்து செய்யப்பட்டது' என்று, வி.ஏ.ஓ., சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.