மாவட்டத்தில் காசநோயால் 6 மாதத்தில் 164 பேர் பலி
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் காச நோயால் ஆறு மாதத்தில், 164 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஜன., முதல் ஜூலை வரை, 66 ஆயிரத்து, 928 நபர்களிடம் சளி பரிசோதனை செய்ததில், 2,126 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. சிகிச்சைக்காக பதிவு செய்த 1,780 நோயாளிகளில் 1,693 பேர் குணமடைந்துள்ளனர். இதில், 164 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நீண்ட நாள் இருமல், இருமலில் ரத்தம் வருவது, மார்பு வலி, சுவாசிப்பதில் சிரமம், எடை இழப்பு மற்றும் பசியின்மை, இரவு நேரத்தில் வியர்வை வருவது, காய்ச்சல், உடல் வலி மற்றும் சோர்வு அறிகுறி இருந்தால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் மக்களை தேடி மருத்துவ முகாம்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம். தொடக்க நிலையிலேயே உரிய சிகிச்சை பெற்றால் குணமாகிவிடலாம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.