6 தீயணைப்பு நிலையங்களில் அலுவலர் இல்லை கலந்தாய்விலும் நிரப்பப்படாததால் சிக்கல்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஆறு தீயணைப்பு நிலையங்களில், நிலைய அலுவலர் இல்லாதது, தீயணைப்பு நிலைய வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தீபாவளி பண்டிகை நெருங்குகிறது. இதையொட்டி பட்டாசு கடை வைக்க தடையின்மை சான்று வழங்கவும், பட்டாசு வெடித்து தீக்காயங்கள் ஏற்பட்டாலோ, வீடுகளில் தீ பிடித்தாலோ அல்லது பட்டாசு கடைகளில் தீ விபத்து ஏற்பட்டாலோ அவற்றை உடனடியாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வரவும், மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் அவசியமாகிறது.இதேபோல் வட கிழக்கு பருவமழை விரைவில் துவங்கி உள்ளது. கன மழையால் வெள்ளம், நீர் நிலைகளில் அடித்து செல்லப்படுபவர்களை மீட்பது உள்ளிட்ட பணிகள் அதிகளவில் உள்ளன. இதற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் அந்தந்த தீயணைப்பு நிலையங்களில் இருக்க வேண்டியது அவசியம். அப்போது தான் உடனுக்குடன் பணிகளை மேற்கொள்ள முடியும்.ஈரோடு மாவட்டத்தில், 11 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இவற்றில் நீண்ட நாட்களாக மொடக்குறிச்சி, கொடுமுடி, அந்தியூர், ஆசனுார், நம்பியூர், கோபி தீயணைப்பு நிலையங்களில் நிலைய அலுவலர்கள் இல்லை. கூடுதல் பொறுப்பாக பிற தீயணைப்பு நிலைய அலுவலர்கள் கவனித்து வருகின்றனர். இதுபற்றி தீயணைப்பு துறையினர் கூறியதாவது:சில நாட்களுக்கு முன் மாநில அளவில் தீயணைப்பு துறையினருக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடந்தது. அப்போது இந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பணியிடங்கள் நிரப்பபடவில்லை. தீபாவளி பண்டிகை, வட கிழக்கு பருவ மழை நெருங்கும் நிலையில் நிலைய அலுவலர் இல்லாதது, தீயணைப்பு மற்றும் மீட்பு பணியில் பின்னடைவை ஏற்படுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.