உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மோசடி புகாரில் 16 ஆண்டுகளாக தலைமறைவு பிசினஸ் சொல்யூசன்ஸ் பிரபாகரன் பெங்களூருவில் கைது

மோசடி புகாரில் 16 ஆண்டுகளாக தலைமறைவு பிசினஸ் சொல்யூசன்ஸ் பிரபாகரன் பெங்களூருவில் கைது

ஈரோடு: கம்ப்யூட்டர் 'ஜாப் ஒர்க்' தருவதாக கூறி, 1.20 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சேலத்தை சேர்ந்தவரை, ஈரோடு சி.பி.சி.ஐ.டி., போலீசார் பெங்களூரில் கைது செய்தனர்.சேலத்தை சேர்ந்தவர் கரன் (எ) பிரபாகரன், 51; ஈரோட்டில், 2002ல் கம்ப்யூட்டர் டேட்டா வேலை அளிக்கும் நிறுவனம் நடத்தினார். வேலைக்கு முன்பணத்துக்கு ஏற்ப டேட்டா வேலை தருவதாகவும், வேலை முடிந்து ஒப்படைத்ததும், செலுத்திய பணத்தை விட இரு மடங்கு தருவதாக விளம்பரம் செய்தார். இதை நம்பிய பலரும், பிரபாகரனிடம் பணம் செலுத்தி கம்ப்யூட்டர் டேட்டா வேலை பெற்று செய்தனர். இந்நிலையில் பிரபாகரன் தலைமறைவானார். பாதிக்கப்பட்டவர்ள் ஈரோடு டவுன் போலீசில் புகார் அளித்தனர். இவ்வழக்கு, ஈரோடு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது.விசாரணையில் ஈரோட்டில் கம்ப்யூட்டர் டேட்டா ஜாப் ஒர்க் தருவதாக, ஒரு கோடியே, 20 லட்சம் ரூபாயை, பிரபாகரன் வசூலித்து மோசடி செய்ததும், அவருடன் கூட்டாளிகளாக ஈரோடு, கொத்துக்காரர் வீதி சவுந்திர பாண்டியன், 50; பிரபாகரன் மனைவி வண்டார்குழலி, 51; சேலம், குமாரகிரிபேட்டை ராஜ்குமார், 49, வீரக்குமார் (எ) வீரமணி, 45; சேலம், கிச்சிபாளையத்தை சேர்ந்த அரசேந்திரன், 62, என ஆறு பேர் இணைந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் சேலம் மாவட்டத்தில் பிசினஸ் சொல்யூசன் பெயரில் நிறுவனம் நடத்தி, மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. பிரபாகரன், அவரது மனைவி உட்பட ஆறு பேர் மீதும், சி.பி.சி.ஐ.டி போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு ஈரோடு ஜெ.எம்.-3 நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இதில் பிரபாகரன் மட்டும், 2008 முதல் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தும் கைது செய்ய முடியவில்லை. 16 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால், பிரபாகரனை தலைமறைவு குற்றவாளியாக கடந்த செப்., மாதம் நீதிமன்றம் அறிவித்தது.இந்நிலையில் துாத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் போலீசார், வேறு ஒருவரை பிடிக்க கர்நாடகா மாநிலம் பெங்களூரு சென்றனர். அந்த நபருடன் பிரபாகரன் இருந்தார். அவரிடம் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் அவரது விவரங்களை சோதனை செய்தபோது ஈரோடு, சேலம், நெல்லை, துாத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பிசினஸ் சொல்யூசன்ஸ் பெயரில் நிறுவனம் நடத்தி, பல கோடி ரூபாய் மேசாடி செய்து, சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் தேடப்பட்டு வருவதும் தெரிந்தது. இதையடுத்து ஈரோடு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு தகவல் அளித்தனர். பெங்களூரு சென்ற சி.பி.சி.ஐ.டி., போலீசார், 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபாகரனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை