தொழிலாளர் துறை ஆய்வில் 48 கடைகள் மீது நடவடிக்கை
ஈரோடு, ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில், துணை, உதவி ஆய்வர்கள் கடந்த ஜூன் மாதம் ஆய்வு மேற்கொண்டனர். மருத்துவமனை, சிகிச்சை மையங்கள், மருத்துவ இல்லங்கள், மருத்துவ பரிசோதனை கூடங்களில் விதிமீறல் தொடர்பாக, 180 இடங்களில் நடந்த ஆய்வில், 36 இடங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டது. நோட்டு புத்தக விற்பனை உட்பட பல்வேறு கடை, நிறுவனங்கள், பொட்டல பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களில் நடந்த ஆய்வில், ஒன்பது கடைகளில் முரண்பாடு கண்டறிந்தனர்.குழந்தை தொழிலாளர், வளரிளம் பருவ தொழிலாளர், கொத்தடிமை தொழிலாளர் எவரும் கண்டறியப்படவில்லை. குறைந்தபட்ச கூலி வழங்குவது தொடர்பாக, 49 நிறுவனங்களில் நடந்த ஆய்வில், மூன்றில் முரண்பாடு கண்டறியப்பட்டு, நடவடிக்கை மேற்கொண்டனர்.