உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விளம்பரம், போஸ்டர்கள் 2வது நாளாக அகற்றம்

விளம்பரம், போஸ்டர்கள் 2வது நாளாக அகற்றம்

ஈரோடு: தேர்தல் நடத்தை விதிகளின்படி, ஈரோடு மாவட்டத்தில் பொது இடங்களில் ஒட்டப்பட்ட அரசியல் கட்சி போஸ்டர், விளம்பரங்களை அகற்றும் பணி நேற்றும் நடந்தது. நேற்று முன்தினம் இரவில், ஈரோடு பி.எஸ்.பார்க் உட்பட பல இடங்களில் உள்ள அண்ணாதுரை, அம்பேத்கர், ஈ.வெ.ரா., கருணாநிதி, எம்.ஜி.ஆர்., - ஈ.வி.கே.சம்பத், காமராஜர் போன்ற தலைவர்கள் சிலைகள், மாவட்டத்தின் பிற இடங்களில் உள்ள சிலைகளும் துணிகளால் சுற்றி மறைக்கப்பட்டன. கட்டடங்கள், பாலங்களில் உள்ள தலைவர்களின் பெயர்கள், கல்வெட்டுக்களை பேப்பர் ஒட்டி மறைத்தனர். இரண்டாவது நாளாக நேற்றும் இப்பணி நடந்தது.இதுபற்றி தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது: மாவட்ட அளவில், 187 இடங்களில் அரசியல் கட்சியினரின் விளம்பர பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டன. மாவட்டம் முழுதும் தலைவர்களின் பெரிய, சிறிய சிலைகள், பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த படங்கள் என, 67 இடங்களில் துணிகளை சுற்றி மறைக்கப்பட்டுள்ளது. கொடிக்கம்பங்கள், சுவர் ஓவியங்கள், விளம்பரங்கள் என, 85 சதவீதத்துக்கு மேல் அகற்றி விட்டோம். தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்த, 48 மணி நேரத்துக்குள் கட்சி நிர்வாகிகளும், நாங்களும் இப்பணியை மேற்கொண்டுள்ளோம். அதன்பின் காணப்படும் விளம்பரம் உள்ளிட்டவைகளுக்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்