சென்னிமலையில் பெருகிய மயில்களால் விவசாயம் பாதிப்பு வன அழிப்பு-நரி வேட்டையால் வந்த வினை
சென்னிமலை::வனத்தை அழித்தது, நரிகளை வேட்டையாடியது போன்ற செயல்களால், மயில்களின் எண்ணிக்கை அதிகரித்து, தற்போது விவசாயம் பாதித்துள்ளது.தேசிய பறவையான மயில், காடு, காடு சார்ந்த பகுதியை வாழ்விடமாக கொண்டது. சென்னிமலையில் வனப்பகுதி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் கணிசமான வன நிலப்பரப்பு உள்ளதால், பல்வேறு கிராமங்களில் பல ஆண்டுகளாகவே மயில்கள் வசிக்கின்றன.மலைப்பகுதி, காடு மற்றும் முட்புதர்களிலும் வாழ்ந்த மயில்கள், காடுகள் அழிப்பால் வனத்தை விட்டு வெளியேறி, விவசாய விளைநிலங்களுக்கு படையெடுக்க துவங்கி உள்ளன. ஒரு காலத்தில் அதிசய பறவையாக பார்க்கப்பட்ட மயில்கள், தற்போது ஆங்காங்கே கூட்டம், கூட்டமாக காணப்படுவதால், வளர்ப்பு பிராணிகள் போல கண்களுக்கு தென்பட துவங்கி உள்ளன. அதேசமயம் விவசாய நிலத்தில் பயிர், தானியங்களை கபளீகரம் செய்வதால், பயிர்களை அழிக்க வந்த பறவையென நினைத்து விவசாயிகள் அச்சப்படுகின்றனர். காட்டுப்பன்றிகளுக்கு அடுத்து மயில்களை வில்லனாக பார்க்கும் நிலை உள்ளது. இதுகுறித்து ஓலப்பாளையம் விவசாயி ஒருவர் கூறியதாவது: மயில்களின் தோற்றத்தை, குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரும் ரசிக்கவே செய்கிறோம். கடந்த சில ஆண்டுகளாக சென்னிமலை சுற்றுவட்டார பகுதி முழுக்க மயில்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டன. கிராமங்களில் காடுகளையொட்டிய விவசாய நிலங்களில் அதிகாலை மற்றும் அந்தி மாலை நேரங்களில் ஏராளமான மயில்கள் உலாவுவதை காணலாம். விளைநிலங்களில் சாகுபடி செய்யப்படும் நிலக்கடலை, நெல், கேழ்வரகு, உளுந்து, பச்சைப்பயறு, மிளகாய் உள்ளிட்ட தானியம், எண்ணெய் வித்து, பயறு வகைகளை சேதப்படுத்த துவங்கி உள்ளன. கூட்டம், கூட்டமாக வயலுக்குள் புகுந்தால், வேளாண் பயிர் முற்றிலும் சேதமாகும். எனவே சென்னிமலை பகுதியில் வனத்தை ஒட்டி வசிக்கும் மயில்களை, அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மயில்களுக்கு தேவையான இரை மற்றும் தண்ணீர் வசதியை வனத்தில் கிடைக்க செய்வதன் வாயிலாக, விளைநிலங்களில் வராமல் தடுக்கலாம்.இவ்வாறு கூறினர்.