உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையனால்தான் பிரச்னை அ.தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் காட்டம்

கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையனால்தான் பிரச்னை அ.தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் காட்டம்

கோபி, ''கோபி, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வால் தான் பிரச்னை,'' என, அ.தி.மு.க., ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் கூறினார்.அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க, பொது செயலர் இ.பி.எஸ்.,சுக்கு, 10 நாட்கள் கெடு விதித்த, கோபி, எம்.எல்.ஏ., செங்கோட்டையனின், கட்சி பதவிகள் பறிக்கப்பட்டு, அவர் வகித்த அ.தி.மு.க., ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவி பொறுப்பாளராக மேட்டுப்பாளையம், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செல்வராஜ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கோபி அருகே வடுகபாளையம் பிரிவில், அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மதியம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:மாவட்ட பொறுப்பாளராக பொறுப்பேற்ற பின், நிர்வாகிகளை சந்திப்பது, ஒரு மாவட்ட செயலாளரின் கடமை. இந்த கூட்டத்தில் யாரெல்லாம் கலந்து கொண்டுள்ளனர் என்பதை கூட்டம் முடிந்த பிறகே தெரியும். செங்கோட்டையனுக்கு ஆதரவாக, 2,000 பேர் ராஜினாமா கடிதத்தை யாரிடம் கொடுத்தனர் என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு கூறினார்.இதையடுத்து நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். கேள்வி: இக்கூட்டத்தில் பவானிசாகர் எம்.எல்.ஏ., கலந்து கொண்டுள்ளார். ஆனால், கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையனை ஏன் அழைக்கவில்லை?பதில்: பிரச்னையே கோபி எம்.எல்.ஏ.,வால்தான்.கேள்வி: செங்கோட்டையன் கட்சி அடிப்படை உறுப்பினராக உள்ளார். கட்சி பொறுப்பில் இருந்து தானே அவர் நீக்கப்பட்டுள்ளார்?பதில்: அடிப்படை உறுப்பினர் என்பது வேறு. நிர்வாகிகள் கூட்டம் என்பது வேறு.கேள்வி: செங்கோட்டையனுக்கு எதிராக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா? பதில்: எந்த தீர்மானமும் நிறைவேற்ற போவதில்லை. நீங்கள் தான் அவரை கெடுத்துள்ளீர்கள். தேவையற்ற கேள்வி கேட்டு குழப்பத்தை உருவாக்க வேண்டாம். இத்துடன் முடித்து கொள்ளலாம். இவ்வாறு கூறிவிட்டு கூட்ட அரங்குக்குள் சென்றார்.உடனடியாக அரங்கின் கதவு மூடப்பட்டது. கூட்டம் முடித்து வந்தவரை, நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது அவர், ''நான் ஒரு சாதாரண ஆள். கூட்டம் சிறப்பாக நடந்தது,'' எனக்கூறி சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை