பெருந்துறை, க.செ.பா., டவுன் பஞ்.,க்களை இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்த அனைத்து கட்சியினர் தீர்மானம்
பெருந்துறை: நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பெருந்துறை பேரூராட்சியுடன், கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சியையும் இணைப்பது தொடர்பாக, அனைத்து கட்சியினர் பங்கேற்ற கூட்டம், பெருந் துறையில் நேற்று நடந்தது. இ.கம்யூ., மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி தலைமை வகித்தார்.கூட்டத்தில் திருப்பூர் எம்.பி., சுப்பராயன், பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., கம்யூ., பா.ஜ., - ம.தி.மு.க., - த.மா.கா., என அனைத்து கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.தாலுகா மற்றும் தொகுதி தலைமையிடமாக, வளர்ந்து வரும் தொழில் நகரமாக பெருந்துறை விளங்குகிறது. பெருந்துறை என்பது இரண்டு டவுன் பஞ்.,க்கள் இணைந்த நகராகும். ஆகவே பெருந்துறை நகரில் ஒருங்கிணைந்த முறையில் வளர்ச்சிப்பணி மேற்கொள்ள வசதியாக, இரண்டு டவுன் பஞ்.,க்களையும் இணைத்து நகராட்சியாக அறிவிக்க வேண்டுமென்று, அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பெருந்துறையை மட்டும் நகராட்சியாக தரம் உயர்த்தி, அரசு அறிவித்தது ஏமாற்றத்தை தருகிறது.இணைந்த நகரமாக உள்ள பெருந்துறையில், பெருந்துறை நகராட்சியாகவும், கருமாண்டிசெல்லிபாளையம் டவுன் பஞ்., ஆகவும் செயல் படும்போது, அனைதத்து வித வரி, தொழிலாளர்களின் ஊதியம் போன்ற பல்வேறு விஷயங்களில் பாகுபாடு ஏற்படும். எனவே தரம் உயர்த்தப்பட்ட பெருந்துறை நகராட்சியுடனம், கருமாண்டிசெல்லிபாளையம் டவுன் பஞ்சாயத்தையும் இணைத்து, மறு அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.