விசைத்தறிகளுக்கு டேரிப் மாற்றம் சலுகை பெற முடியாதென முறையீடு
ஈரோடு, விஜயமங்கலம் மற்றும் சுற்றுப்பகுதி சிறுகுறு விசைத்தறி நெசவாளர்கள், ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம் நேற்று மனு வழங்கி கூறியதாவது:விஜயமங்கலம் மற்றும் சுற்றுப்பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்படுகின்றன. விசைத்தறி கூடங்களுக்கான மின்சார பிரிவு '3ஏ2'வை உபயோகிக்கிறோம். இவற்றுக்கு, 1,000 யூனிட் மின்சாரத்தை தமிழக அரசு சலுகையாக வழங்கி வருகிறது. இந்த மின்சார வரம்பு எல்லை, 12கே.டபிள்யூ., ஆக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எங்களது சிறு, குறு நெசவு தொழில் அரசு அனுமதி வழங்கிய வரம்புக்கு உட்பட்டு நெசவு செய்து வருகிறோம்.தற்போது எங்கள் பகுதிக்கு உட்பட்ட மின்வாரிய அலுவலகத்தில், 2022 அக்., மாதம் முதல், பிரிவு '3ஏ2' ரத்து செய்து, '3ஏ1' ஆக மாற்றம் செய்ததாக உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த மாற்றம் செய்து தற்போதைய கணக்கீட்டில் நிலுவை தொகையை வசூலிக்க உத்தரவு பிறபித்துள்ளனர். இதனால் சிறுகுறு நெசவு தொழில் மிகவும் முடங்கி நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பழைய நடைமுறையில் உள்ள பிரிவு '3ஏ2'வை உபயோகிக்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.