பவானிசாகர் அணை மீனவர்கள் அறிவித்த போராட்டம் வாபஸ்
பவானிசாகர், அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், மீனவர்கள் அறிவித்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்தில், மீன் பிடிக்கும் குத்தகை உரிமத்தில், சிறுமுகை மற்றும் பவானிசாகர் மீனவர் கூட்டுறவு சங்கத்தை சார்ந்த தகுதியான உறுப்பினர்கள் அனைவரையும், பங்குதாரர்களாக சேர்க்க கோரி, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பினரால் வரும், 25ம் தேதி பவானிசாகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை மீன்வளத்துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது.இதில் தகுதியான அனைத்து உறுப்பினர்களும் மீன்பிடி குத்தகை உரிமத்தில் பங்குதாரர்களாக செய்ய வழிவகை ஏற்படுத்தவும், தகுதி இல்லாத உறுப்பினர்களை நீக்கம் செய்யவும் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து மீன்பிடி தொழிற்சங்க கூட்டம் சார்பில் அறிவிக்கப்பட்ட காத்திருப்பு போராட்டம் கைவிடப்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.