செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள, நகர சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு, முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் தகுதியானவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மாதம், 14 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும். இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. இப்பணியிடத்துக்கு துணை செவிலியர் மருத்துவம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும். பணி வரன் முறை, நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பத்தாம் வகுப்பு மதிப்பெண், பிளஸ் 2 மதிப்பெண், தகுதியான பட்டய படிப்பு மதிப்பெண் அடிப்படையிலும் மற்றும் நேர்முக தேர்வின் மதிப்பெண் அடிப்படையிலும் கணக்கிடப்பட்டு தேர்வு நடைபெறும். தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலிங்கில், கல்வி தகுதி பதிவு பெற்று இருக்க வேண்டும். கல்வி சான்று நகல்கள், போட்டோவுடன் கூடிய விண்ணப்பத்தை வரும், 27க்குள் கமிஷனர், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், எம்.எஸ். சாலை ஈரோடு என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.இத்தகவலை, மாநகராட்சி துணை கமிஷனர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.