உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாளவாடி கோவிலில் சாணியடி திருவிழா ஒருவர் மீது ஒருவர் வீசி வினோத வழிபாடு

தாளவாடி கோவிலில் சாணியடி திருவிழா ஒருவர் மீது ஒருவர் வீசி வினோத வழிபாடு

சத்தியமங்கலம்: தாளவாடி மலையில் நடந்த வினோத திருவிழாவில், ஒருவர் மீது ஒருவர் சாணம் வீசி, பக்தர்கள் கொண்டாடினர்.ஈரோடு மாவட்டம் தாளவாடிமலை கும்டாபுரத்தில், நுாற்றாண்டுகள் பழமையான, பீரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் தீபாவளி முடிந்த மூன்றாவது நாளில், சாணியடி திருவிழா நடந்து வருகிறது. இதன்படி நேற்று இந்த விழா வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது. ஊர் குளத்தில் இருந்து கழுதை மீது, உற்சவர் சுவாமி சிலையை வைத்து, ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். கோவிலை அடைந்ததும் மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜை நடந்தது. கோவில் எதிரே பசுமாட்டு சாணம் மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. மேலாடை அணியாத ஆண்கள், சிறுவர்கள், குவித்து வைக்கப்பட்டிருந்த சாணியை உருண்டையாக பிடித்து, ஒருவர் மீது ஒருவர் வீசி வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் விழா நடந்தது. இதன் பிறகு அனைவரும் ஊர் குளத்துக்கு சென்று நீராடி கோவிலுக்கு வந்தனர். ஆடைகளை அணிந்து திருவிழா நடந்த இடத்தில் கிடந்த சாணத்தை, பெரும்பாலானோர் எடுத்து சென்றனர். இதை விளை நிலங்களில் வீசினால், சாகுபடி நன்றாக இருக்கும். பயிர்களை நோய் தாக்காது என்றும் தெரிவித்தனர். வினோத விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை