உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கட்டபொம்மன் வீதிக்கு கலெக்டர் கந்தசாமி தீர்வு ஓடை துார்வாரும் பணி மும்முரம்; மக்கள் மகிழ்ச்சி

கட்டபொம்மன் வீதிக்கு கலெக்டர் கந்தசாமி தீர்வு ஓடை துார்வாரும் பணி மும்முரம்; மக்கள் மகிழ்ச்சி

ஈரோடு, ஈரோடு மாநகராட்சி, 59வது வார்டுக்கு உட்பட்ட கொல்லம்பாளையம், கட்டபொம்மன் வீதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. மழை பெய்தால் இப்பகுதி வெள்ளக்காடாக மாறுவது தொடர்கதையாக உள்ளது. கடந்த, 19ம் தேதி இரவு கொட்டிய மழையால், வழக்கம்போல் வீதியில் மழைநீருடன் கழிவுநீர் புகுந்தது. சில வீடுகளிலும் வெள்ளம் பாய்ந்தது. மறுநாள் மாநகராட்சி கமிஷனர் அர்பித் ஜெயின் சென்று பார்வையிட்டார்.அப்பகுதிக்கு அருகில் செல்லும் ஓடை துார் வாரப்படாததே காரணம் என்பது தெரிய வந்தது. மாநகராட்சி ஊழியர்களை துார்வாரச்சொல்லி அறிவுறுத்தி சென்றார். ஆனால், ஊழியர்கள் வழக்கம்போல் 'பாவ்லா' காட்டி சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பெய்த மழையால், கட்டபொம்மன் வீதி குடியிருப்பு, மீண்டும் கழிவுநீர் தேங்கும் வீதியாக மாற மக்கள் அவதிக்கு ஆளாகினர். இதுகுறித்து நமது நாளிதழில் நேற்று படங்களுடன் விரிவான செய்தி வந்தது. இதன் எதிரொலியாக கலெக்டர் கந்தசாமியே நடவடிக்கையில் இறங்கினார். அதிகாரிகளுடன் கட்டபொம்மன் வீதிக்கு கலெக்டர் சென்றார். ஆய்வுக்குப் பிறகு பொக்லைன் இயந்திரம் மூலம் ஓடையை துர்வாரும் பணியை உடனடியாக தொடங்க அறிவுறுத்தினார். மேலும் வீதி முழுவதும் துாய்மை படுத்தும் பணி, மருத்துவ குழு மூலம் நோய் தொற்று பாதிப்பு கண்டறியவும் உத்தரவிட்டார். இதன்படி அனைத்து பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடந்தது. கலெக்டருடன் கமிஷனர் அர்பித் ஜெயின், துணை ஆணையர் தனலட்சுமி, ஆர்.டி.ஓ., சிந்துஜா உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர்.கலெக்டரின் நடவடிக்கையால் கட்டபொம்மன் வீதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ