நுால் வழங்குவதில் தொடர்ந்து இழுபறி இலவச வேட்டி, சேலை உற்பத்தி தாமதம்
ஈரோடு:பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு இதுவரை நுால் வழங்காததால், விசைத்தறிகளில் உற்பத்தி பணி துவங்காமல் நெசவாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.வரும், 2025 பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கார்டுதாரர்கள், அந்தியோதயா அன்னயோஜனா திட்ட பயனாளிகள், முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு இலவச வேட்டி, சேலை வழங்க அரசு உத்தரவிட்டது.மொத்தம், 1 கோடியே, 77 லட்சத்து, 22 ஆயிரத்து, 995 வேட்டி, 1 கோடியே, 77 லட்சத்து, 64 ஆயிரத்து, 471 சேலை உற்பத்திக்கு உத்தரவிட்டு, முதற்கட்டமாக, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.கடந்த 6 முதல், 20ம் தேதிக்குள், 60 கிலோ எடை கொண்ட, 20,000 பையில் வேட்டிக்கான, '40எஸ்' பாலியஸ்டர் காட்டன் நுால் மட்டும் வரத்தானது. சேலைக்கான நுால் இதுவரை வராததால், வேட்டி, சேலை உற்பத்தி இதுவரை துவங்கவில்லை.இதுபற்றி, விசைத்தறியாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:பொங்கலுக்கான வேட்டி, சேலைக்கான நுால் கடந்த, 14ல் வழங்கி, 16ல் உற்பத்தி பணியை துவங்க அரசு அறிவித்தது. கடந்த வாரம் வரை வேட்டி உற்பத்திக்கான, '40எஸ்' பாலியஸ்டர் காட்டன் நுால் வந்தது. வேட்டி பார்டருக்கான 'கலர் குறிக்கோன்', பாபின் கட்டை இதுவரை வரவில்லை. '80எஸ்' டீனியர் வெள்ளை ஊடை நுால், 15 டன் வந்தும், 'டெஸ்ட்' முடித்து தரமானது என்ற முடிவு அறிவிக்கவில்லை.கடந்த ஆக., 20ல் அரசுடன் நெசவாளர்கள், அதிகாரிகள், நுால் உற்பத்தியாளர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் செப்., 16ல் உற்பத்தியை துவங்கி நவம்பரில் முடிக்க கோரினர். ஆனால், நுால் வருவதில் தாமதம் ஏற்படுவதை அறிந்து ஜன., 31க்குள் முடித்து தருகிறோம் என, நெசவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று முன்தினம் வரை முழு அளவில் தேவையான நுால் வராததால், வேட்டி, சேலை என எந்த பணியும் துவங்கவில்லை.இப்போது நுால் வந்தால் கூட, அதை டெஸ்ட் செய்து உறுதிப்படுத்தி உற்பத்தியை துவங்க, 10 நாட்களுக்கு மேலாகும். இதனால் இலவச வேட்டி, சேலை உற்பத்தியை நிறைவு செய்ய பிப்., இறுதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இலவச வேட்டி, சேலையை நம்பி வேறு ஆர்டர்கள் எடுக்காததால், பெரும்பாலான விசைத்தறிகள் கடந்த, 10 நாட்களுக்கு மேலாக துணிகள் ஓட்டாமல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு கூறினர்.